எங்கள் அப்பம்மா சிறந்த சமையல்காரி. எங்கள் சொந்தங்கள், பந்தங்கள், அயலட்டையில் எவருக்கேனும் கொண்டாட்டம் என்றால், இடுப்பில் சீலையைத் தூக்கிச் சொருகிக்கொண்டு சமையல் பகுதியில் முதல் ஆளாக நின்றிருப்பா. அவரது வீடு ஒரு அமுதசுரபி போன்றது; எந்த நேரத்தில் யார் வந்தாலும், அவர்களுக்கு சாப்பாடு அளிக்காமல் அனுப்புவதில்லை.
அப்பம்மா சமைக்கும் உணவின் சுவை, அனைவரையும் கவரும். அவர் சமையல் எப்போதும் வீட்டு உறுப்பினர்களின் தேவையைத் தாண்டியே இருக்கும். எதிர்பாராத நேரத்தில் வந்தவர்களுக்காகவும் கூடுதல் உணவு இருக்கும். விருந்தினர் என்ற அடிப்படையில், அனைவரையும் அன்புடன் ஏற்றுக்கொண்டு, உணவின் மூலம் மகிழ்ச்சியை பரப்புவதே அவருடைய இயல்பு.
அப்பம்மாவின் சமையலறை ஒரு கொண்டாட்டத்திற்குரிய புனித இடம் போல இருக்கும். அவரது கையால் தயாரான உணவு, அப்படியொரு சுவையாய் இருக்கும். அப்பம்மாவின் அந்தக் கைப்பக்குவம் திருமணமாகி வந்த பின் அப்பம்மாவிடம் சமையல் பழகிய என் அம்மாவிடமும் உண்டு. அதே பக்குவம் என்னிடமும் என்னிடம் சமையல் பழகிய என் மனைவியிடமும் என் தங்கையிடமும் உண்டு.
அப்பம்மா வித்தியாசமான மாலைச் சிற்றுண்டிகள் செய்வா. மரவள்ளிக் கிழங்குக்கு எங்கள் ஊர் பெயர் போனது என்பதால் மரவள்ளிக் கிழங்கில் செய்யப்படும் சிற்றுண்டிகள் அதிகமாய் இருக்கும்.
மரவள்ளிக் கிழங்கை நீள நீளமாக வெட்டி, கோதுமை மாவில் உப்பு, மஞ்சள், அரைத்த செத்தல் சேர்த்து செய்த கலவையில் பொரித்தெடுப்பா. அப்பிடி ஒரு சுவையாய் இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டிகளில் இதுவும் ஒன்று. நல்ல மாப்பிடிப்பான மரவள்ளி கிழங்கை கண்டால் அப்பம்மாவின் நினைவு வந்துவிடும். வேண்டி வந்து அதே போல் பொரித்துவிடுவேன்.
இன்றும் அதே போல்…
இதன் செய்முறை
#இணுவையூர்_மயூரன்
09.02.2025
No comments:
Post a Comment
தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.