Pages

February 7, 2016

எதிர்பாராப் பயணம் அது எதிர்கொண்டு வந்துவிட்டேன்


முல்லைத்தீவு போயிருந்தேன் - அந்த
முள்ளிவாய்க்கால் தாண்டிப் போனேன்
இறங்கி நின்று படமெடுக்க - என்
இதயம் ஒன்றும் இரும்பால் ஆனதில்லை

விசுமடு தாண்டிப் போக நான் தொழுத
வீரர் புதைந்த குழி மேடாய் கண்ட பின்னர்
வீதி வழி விடுப்புப் பார்த்து மனம் கனக்க
விருப்பம் இன்றி பூனை போல ஆகி நின்றேன்

ஆனந்தபுரமும் மாத்தளனும் பெயர்ப் பலகையிலே
அருகிருந்த தம்பி தட்டி அதன் கதை சொல்லி காட்ட
ஆவி அடங்கி அத்தனை உயிர் கொடுத்த இடத்தை
ஆர்வம் இன்றி அகம் கனக்க அகன்று போனேன்

வட்டு வாக்கால் பாலம் தாண்ட தேக்கி வைச்ச
மீதிக் கண்ணீர் விழி உடைத்து வழி தேட
வார்த்தைகள் வாய் திறந்து உதிர்க்க மறுத்து
வரலாற்றில் பதிந்த அந்தத் தடம் கடந்தேன்

இந்த ஏரிதான் எங்கள் உறவுகள் உடலங்கள் மிதந்த ஏரி
இரத்த ஆறாய் செங்குழம்பாய் திடப் பொருளாய் மிதந்த ஏரி
மறு கரை இருந்து மிதக்கும் உடலங்களை விலத்தி விட்டு
முற்றும் மறந்து நீர் பருகினோமென மச்சான் சொன்னான்

வாழ்க்கையிலே நான் போக விரும்பா இடம் - தமிழ்
வரலாற்றின் முடிவுரையும் முகவுரையும் சொல்லுமிடம்
எதிர்பாரா பயணம் அது எதிர் கொண்டு வந்து விட்டேன்
இனி ஒருக்காலும் வேண்டாம் என் வாழ்வில் அது

வீழ முடியாத வீரம் வஞ்சித்து வீழ்த்தப்பட்ட வரலாறை
விடுதலைக்காய் உயிர் தந்த வீரியம் கொண்ட அந்த
வித்துக்களின் பெயரால் கேட்கிறேன் யாரும் பிழைப்புக்காய்
வீர காவியம் என்று விலை பேசி விற்று விடாதீர்.

#ஈழத்துப்பித்தன்
07.02.2016

(படம்: வட்டு வாக்கால் பாலம். யுத்தத்தின் இறுதி மையப்புள்ளியாகச் சொல்லப்படும் இடம். இந்த நீரேரி இறுதி நேரத்தில் உடலங்கள் நிறைந்து செந்திறத்தில் ஓடியதாம். இறங்கி நின்று பார்க்க மனத்துணிவு இல்லாத்தால் வாகனத்தினுள் இருந்து எடுத்த படம்)

6 comments:

நிஷா said...

மன உணர்வும் எழுச்சியும் வெளிப்படும்வைர வரிகள்!

வித்துக்களின் பெயரால் கேட்கிறேன் யாரும் பிழைப்புக்காய்
வீர காவியம் என்று விலை பேசி விற்று விடாதீர்.

ஆனால் விலை பேசிக்கொண்டே இருக்கின்றோம். என்றேனும் விற்றும் விட்டும் விடுவோம். அருமை மயூரன், இன்னும் எழுதுங்கள்,

எழுதியது யார் என பாராமல் எழுதிய வரிகள் மட்டும் பார்த்தால் நீங்களும் நாளைய வைரமுத்து தான்,

'பரிவை' சே.குமார் said...

இந்த ஏரிதான் எங்கள் உறவுகள் உடலங்கள் மிதந்த ஏரி
இரத்த ஆறாய் செங்குழம்பாய் திடப் பொருளாய் மிதந்த ஏரி
மறு கரை இருந்து மிதக்கும் உடலங்களை விலத்தி விட்டு
முற்றும் மறந்து நீர் பருகினோமென மச்சான் சொன்னான்

வேதனை நிறைந்த வரிகள் நண்பரே....

வைரமுத்துவும் எழுதியிருந்தார்... கேமரா முன்பாக நடித்துப் பேசினார். தாங்கள் மனம் வலித்துப் எழுதியிருக்கிறீர்கள்.
அருமை..

நிஷா said...

கருத்திடலுக்கு நன்றி குமார்,வைரமுத்துவின் வரிகளை ஆஹா ஓஹோ என்ற போது நான் நினைத்தும் சொல்லாததை நீங்கள் சொல்லி விட்டீர்கள். அதற்கும் நன்றி,

Inuvaijurmayuran said...

என் உணர்வோடு ஒன்றி வலியில் பங்கேற்ற உறவுகளே!
நிஷா அக்கா, சகோதரன் பரிவை சே.குமார் நன்றி!!!

நிலாமதி said...

வரலாறாய் மாறிவிட்ட சோகம் ... கவிதை வரிகள் மிக்க நன்று ...தொடர்ந்து உங்கள் ஆக்கங்கள் வரவேண்டும் .

Inuvaijurmayuran said...

மிக்க நன்றி நிலாமதி அக்கா.
எங்கள் வலிகள் எம் மரணம் வரை தொடரும்.

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.