Pages

December 6, 2020

கச்சல் கோப்பியும் காச்சின கசிப்பும்

 கச்சல் கோப்பியும் காச்சின கசிப்பும்

**********************************



நேற்று சுவிற்சர்லாந்தின் மத்தியில் அமைந்துள்ள கிராமமொன்றுக்கு சென்றிருந்தேன். அழகான விவசாயக் கிராமம்.

ஏற்கனவே மூன்று தடவை அந்த இடத்துக்கு சென்றிருக்கிறேன். ஒரு தடவை வசந்தகாலத்தின் ஆரம்பநாட்களிலும் இரண்டாவது தடவை கோடையின் இறுதிக்காலத்திலும் நேற்று பனிக்காலத்தின் ஆரம்பத்திலும் சென்றிருந்தேன். ஒவ்வொரு காலத்துக்கும் அந்தந்தக்காலத்துக்கான அழகோடு அந்தப் பகுதி மிளிரும்.

நான் சென்ற இடம் ஒரு விவசாயக் குடும்பத்தின் பண்ணை. பரந்து விரிந்த வயலின் நடுவே அந்த பண்ணை வீடு அமைந்துள்ளது. கடந்த தடவை சென்றபோது அறுவடைக்கு தயாராயிரிந்த சோளமும், கோதுமையும் இம்முறை அறுவடை செய்யப்பட்டு வயல்வெளி கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறுந் தரையாகக் கிடந்தது. பண்ணை வீட்டோடு உள்ள தொழுவத்தில் ஆடு, மாடு, குதிரை, முயல் போன்ற வீட்டு விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. 

அதன் அருகேயுள்ள குடியிருப்பில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வரும் அந்தக் குடும்பம் மூன்று தலைமுறை உறுப்பினர்களோடு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றார்கள். தற்போதய பண்ணையை நிர்வகிக்கும் விவசாயியான தோமாஸ் அவரது மனைவி மற்றும் அவரது தாய் தந்தை அவரது வளர்த்த மூன்று பிள்ளைகள் என அவர்களது குடும்பம் விரிகின்றது. கடந்த தடவை அவரோடு அவரது குடும்பம் பற்றி உரையாடியபோது தலைமுறை தலைமுறையாக தாம் விவசாயக்குடும்பம் எனவும் தற்போது தனது பிள்ளைகளில் ஒருவர் கணனி பொறியியற்துறையில் கற்கையை முடித்து வேலை செய்வதாகவும் மகள் பெண்களுக்கான மருத்துராவதற்கான மருத்துவக்கல்வியின் இறுதியாண்டிலும் ஒரு மகன் கல்விகாலம் நிறைவடைந்ததும் விவசாயத்தை்பொறுப்பேற்று நடத்த ஆர்வங்கோண்டு ஓய்வுநேரங்களில் தன்னோடு   இணைந்து வயல் மற்றும் பண்ணை வேலைகளையும் கவனிப்பதாக பெருமையோடு கூறினார்.

நகர்ப்புற மனிதர்களின் வாழ்வை வைத்து இதுதான் சுவிஸ்நாட்டவர்களின் வாழ்வியல் என அறிதியிட்டுக்கொள்வோர் நிச்சயம் கிராமங்களுக்குச் சென்று அந்த மக்களின் வாழ்வியலைக் காணவேண்டும். அவர்களின் குடும்ப அமைப்பை, இப்படித்தான் வாழல் வேண்டும் என்ற அவர்களின் வாழ்வின் வரைபைக் காணலாம்.

போன ஒவ்வொரு தடவையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆச்சி ஊத்தும் கோப்பியை காச்சின கசிப்புக் கலந்து அன்போடு பருகத் தந்து விருந்தோம்பி அனுப்பி வைப்பார்கள். கச்சல் கோப்பியும் காச்சின கசிப்பும் சுவிசின் கிராமங்களின் அதி உன்னத பானமாகும். சீமை நாவல் (செரி), பேரிக்காய் அல்லது குமுளிக்காய் (அப்பிள்) ஆகியவற்றிலிருந்து காய்ச்சி எடுக்கப்படும் மதுவானது மதுசாரம் மிகவும் அதிகமானது. அதில் சுமார் 80 %வரையான மதுசாரம் இருக்கும். மருந்துபோல் பயன்படுத்துவார்கள். ஒரு கோப்பை சூடான கறுப்புக் கோப்பியில் ஒரு தேக்கரண்டி அல்லது ஒரு மூடி மதுவை கலந்து அதே சூட்டோடு குடித்தால் நெஞ்சுச்சளி, தடிமன் போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும். குளிர்காலத்தில் இதனை பருகினால் குளிரைத்தாங்கும் கதகதப்பை உடல்பெற்றுக்கொள்ளும். உணவுச் செமிபாட்டையும் துரிதப்படுத்தும். கிட்டத்தட்ட எங்கள் ஊரில் குழந்தைகளுக்கு கிறேப் வாட்டர் பருகக் கொடுப்பதைப்போல.

சுவிஸ் மக்களும் வாழ்வும்

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.