Pages

January 24, 2021

வெள்ளிப்பனி சொரியும் காலம்

 


குழந்தைகளுக்கான இலக்கியத்தில் எமது புது முயற்சி. நாம் வாழும் தேசத்தின் வாழ்வைப் பாட முயன்றுள்ளோம். வரவேற்று உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை/விமர்சனங்களை முன் வையுங்கள். அது எம்மை வளம்படுத்தும்.

இணுவையூர் மயூரனின் ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் நூலில் இடம்பெற்ற பனிக்காலப் பாடல்.

„வெள்ளிப்பனி சொரியும் காலம்“

வரிகள்: இணுவையூர் மயூரன் (ஈழத்துப்பித்தன்)

இசை: ப.கருணாகரன்

பாடியோர்: க.சதுர்சிகா, இ.தர்சிகா

ஒலிப்பதிவு: யோகம்மா கலையகம் முல்லைத்தீவு

ஒருங்கிணைப்பு: குமாரு யோகேஸ்

காட்சிப்பதிவு: தேன்மொழி, மயூரன், மகிழினி

வெளியீடு: மகிழம் படைப்பகம் - சுவிஸ்

தயாரிப்பு: பாசல் தமிழ்ச் சங்கம் - சுவிஸ்

பகிர்ந்து Subscribe செய்து நல்லாதாரவு நல்குமாறு அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.


https://youtu.be/I5WN7BuSdOg

January 17, 2021

நோர்வே மாட்டுக்கு நான் வைச்ச தமிழ்ப் பெயர்

 

கடந்த 2001ம் ஆண்டளவில் ஒரு பயிற்சிப் பட்டறைக்காக நோர்வே நாட்டின் Hammer என்ற நகருக்கு சென்றிருந்தேன். 

அங்கு மலையும் ஆறும் விவசாய நிலங்களும் கூடிய அழகான கிராமமொன்றில் தான் தங்கினோம். நாம் தங்கியிருந்த வீடு கூட ஒரு பண்ணை வீடு. இயற்கை வழி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்பட்ட பகுதி அது. 

உலகமயமாக்கல் - சூழல் பேணல் - இயற்கை விவசாயம் இந்த தலைப்புகளை மையப்படுத்தி எமது பட்டறை ஒருங்கிணைக்கப்பட்டதால் அந்த இடம் தெரிவாகியிருந்தது.

நாம் தங்கியிருந்த இடம் ஒரு பண்ணை வீடு என்பதால் அதன் சூழலில் வீட்டு விலங்குகளின் வளர்ப்பும் இருந்தது. மிகப் பெரிய மாட்டுத் தொழுவமும் பல மாடுகளும் அங்கு இருந்தன. நாம் போயிருந்த அந்த வாரத்தில் அங்குள்ள மாடு ஒன்று கன்று ஈன்றுவிட்டது. நாம் அங்கு நின்ற வேளையில் மாடு கன்று ஈன்றதால் அந்தக் கன்றுக்கு தமிழில் ஒரு பெயரைச் சூட்ட வேண்டுமென அந்த பண்ணை உரிமையாளர் விரும்பினார். 

அந்தப் பொறுப்பை எம்மிடம் தந்துவிட்டார். நோர்வே பண்ணைகளில் ஒரு வழக்கமுண்டு தாய்ப்பசுவின் முதல் எழுத்தின் தொடர்ச்சியாகவே கன்றுக்கு பெயர் அமைய வேண்டும். அங்கே அந்த தாய்ப்பசுவின் பெயர் O என்ற ஆங்கில எழுத்தில் அமைந்திருந்தது அதே எழுத்து முதல் எழுத்தாய் அமையும் வகையில் பெயரொன்று வேண்டுமெனக் கேட்டிருந்தார்.

ஒப்பிலாள் என்ற பெயரை நானும் ஓவியா என்ற பெயரை் வேறொருவரும் முன்மொழிந்திருந்தோம். நிறைவாய் எம்மோடு இணைந்திருந்த அவுஸ்திரேலியா வாழ் அன்றைய டென்மார்க் பல்கலைக் கழகத்தின் விவசாயத்துறை விரிவுரையாளராயிருந்த பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா மற்றும் நோர்வேயின் கவிஞர் சோதியா கனடா பார்த்தீபன் ஆகியோர் தலைமையில் எடுக்கப்பட்ட இறுதித் தீர்மானத்தின் படி எனது முன்மொழிவான ஒப்பிலாள் என்ற பெயர் சூட்டப்பட்டது.

அந்த ஓவியா் என்ற இரண்டாவது பெயரும் இதே பயணத்தின் தொடர்ச்சியாய் வேறொரு இடத்தில் சூட்டப்பட்டு ஐரோப்பியத் தமிழர் வாய்களில் சில ஆண்டுகள் முனு முனுக்கப்பட்டது.

ஆம் எம்மோடு பிரான்சிலிருந்து அந்த பட்டறையில் இணைந்த ராஜன் என்பவர் கைகளில் கொழுவி வைத்து அதன் அசைவுகள் மூலம் பேச வைக்கும் மொம்மை ஒன்றை பிரான்சில் இயங்கிய TTN தொலைக்காட்சியின் சிறுவர் நிகழ்வுக்காக எடுத்துச் சென்றார். அந்தப் பொம்மைக்கு அந்தப் பெயரான ஓவியா சூட்டப்பட்டு நீண்டகாலமாய் தொலைக்காட்சி நிகழ்வாய் வலம் வந்தது.

January 14, 2021

தைப்பொங்கல் 2021

 

அன்புக்குரிய உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வாசலிலே வண்ணக் கோலம் 
வடிவழகாய் பூக்கட்டும்!
வான் அரசன் கதிரவனும்
வந்து நின்று பார்க்கட்டும்!
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பொங்கட்டும்!
வந்தது தை என்று
வாழ்த்தொலிகள் பரவட்டும்!
வண்ணத் தமிழ் இனிக்க
வரவேற்கும் பண்பு தொடரட்டும்!
மஞ்சள் இலை இஞ்சி இலை
மங்கலத்தை கூட்டட்டும்!
மயில்த் தோகை விரிந்தது போல்
மாக் கோலம் ஒளிரட்டும்!
மாவிலையும் தோரணமும்
மகிழ்ந்து எங்கும் ஆடட்டும்!
மத்தாப்பாய் புன்னகைகள்
மலர்த்து எங்கும் வீசட்டும்!
மண் உழுத உழவர்
மாண்பு எங்கும் பரவட்டும்!
துன்பங்கள் தொலைந்து எம் வாழ்வில்
இன்பம் என்றும் நிலைக்கட்டும்!
இணுவையூர் மயூரன்
#ஈழத்துப்பித்தன்
01.2021
அன்புடன்
இணுவையூர் மயூரன்

January 7, 2021

அடையாளம்

 


தமிழர் தங்கள் அடையாளங்களை பேணுவது அல்லது மீட்டெடுப்பது அல்லது தக்க வைப்பது சிலருக்கு தமது இன அடையாளங்களை அழித்துவிட வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலாய் அமைகின்றது. 


அதன் வெளிப்பாடு வேட்டி நாளை கொண்டாடியவர்கள் கோவணநாளை கொண்டாடுவார்களா எனத் தொடங்கி பல வழிகளிலும் தமது எதிர் மனநிலையை கக்கத் தொடங்கியுள்ளார்கள்.


இத்தகைய கொண்டாட்ட மனநிலையூடாக அநாகரீக உடை என ஒதுக்கப்பட்ட வேட்டி கொண்டாட வேண்டிய உடை என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் விதைக்கப்படுகின்றது.


சில காலங்களாக திருமணங்களில் கூட மாப்பிளை வேட்டி கட்டுவதை தவிர்த்து வடநாட்டு உடைகளுக்கு மாறும் கொடுமைகள் எம் இனத்தில் மட்டுமே நிகழும் மிகப்பெரும் அடையாளத் தொலைப்பாகும்.


சிங்களவர்கள், யூதர்கள், சீக்கயர்கள், முஸ்லீம்கள், ஆபிரிக்கர்கள் இந்தியாவின் ஏனைய மாநிலத்தவர்கள் எவர்களுமே தங்கள் பாரம்பரிய ஆடை அணிவதை, அதை கொண்டாடுவதை பெருமையாக நினைக்கின்றார்கள். எந்த வசதி படைத்தவர்களாக இருந்தாலும் தங்கள் குடும்ப, பண்பாட்டு விழாக்களில் தங்கள் பாரம்பரிய உடைகளைத்தான் அணிகின்றார்கள்.


மன உறுதியையும், ஒருவித திமிரையும், கெத்தையும், அழகையும், கம்பீரத்தையும் தரும் வேட்டி என் பண்பாட்டு உடை என்பதை பெருமையோடு சொல்வேன். வாய்ப்புக் கிடைத்த தருணங்களிலும் வாய்ப்பை உருவாக்கியும் அணிவதில் மகிழ்வும் பெருமையும் கொள்கின்றேன்.


தைக்காமால் ஒரு உடை அணியப்படுகின்றது என்றால் அது தமிழனின் பாரம்பரிய உடையாக மட்டுமே இருக்கும்.


தாழ்வு மனப்பாண்மையை தகர்த்தெறிந்துவிட்டு எங்கள் அடையாளங்களை கொண்டாடுவோம்.


நன்றி வணக்கம்