கடந்த 2001ம் ஆண்டளவில் ஒரு பயிற்சிப் பட்டறைக்காக நோர்வே நாட்டின் Hammer என்ற நகருக்கு சென்றிருந்தேன்.
அங்கு மலையும் ஆறும் விவசாய நிலங்களும் கூடிய அழகான கிராமமொன்றில் தான் தங்கினோம். நாம் தங்கியிருந்த வீடு கூட ஒரு பண்ணை வீடு. இயற்கை வழி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்பட்ட பகுதி அது.
உலகமயமாக்கல் - சூழல் பேணல் - இயற்கை விவசாயம் இந்த தலைப்புகளை மையப்படுத்தி எமது பட்டறை ஒருங்கிணைக்கப்பட்டதால் அந்த இடம் தெரிவாகியிருந்தது.
நாம் தங்கியிருந்த இடம் ஒரு பண்ணை வீடு என்பதால் அதன் சூழலில் வீட்டு விலங்குகளின் வளர்ப்பும் இருந்தது. மிகப் பெரிய மாட்டுத் தொழுவமும் பல மாடுகளும் அங்கு இருந்தன. நாம் போயிருந்த அந்த வாரத்தில் அங்குள்ள மாடு ஒன்று கன்று ஈன்றுவிட்டது. நாம் அங்கு நின்ற வேளையில் மாடு கன்று ஈன்றதால் அந்தக் கன்றுக்கு தமிழில் ஒரு பெயரைச் சூட்ட வேண்டுமென அந்த பண்ணை உரிமையாளர் விரும்பினார்.
அந்தப் பொறுப்பை எம்மிடம் தந்துவிட்டார். நோர்வே பண்ணைகளில் ஒரு வழக்கமுண்டு தாய்ப்பசுவின் முதல் எழுத்தின் தொடர்ச்சியாகவே கன்றுக்கு பெயர் அமைய வேண்டும். அங்கே அந்த தாய்ப்பசுவின் பெயர் O என்ற ஆங்கில எழுத்தில் அமைந்திருந்தது அதே எழுத்து முதல் எழுத்தாய் அமையும் வகையில் பெயரொன்று வேண்டுமெனக் கேட்டிருந்தார்.
ஒப்பிலாள் என்ற பெயரை நானும் ஓவியா என்ற பெயரை் வேறொருவரும் முன்மொழிந்திருந்தோம். நிறைவாய் எம்மோடு இணைந்திருந்த அவுஸ்திரேலியா வாழ் அன்றைய டென்மார்க் பல்கலைக் கழகத்தின் விவசாயத்துறை விரிவுரையாளராயிருந்த பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா மற்றும் நோர்வேயின் கவிஞர் சோதியா கனடா பார்த்தீபன் ஆகியோர் தலைமையில் எடுக்கப்பட்ட இறுதித் தீர்மானத்தின் படி எனது முன்மொழிவான ஒப்பிலாள் என்ற பெயர் சூட்டப்பட்டது.
அந்த ஓவியா் என்ற இரண்டாவது பெயரும் இதே பயணத்தின் தொடர்ச்சியாய் வேறொரு இடத்தில் சூட்டப்பட்டு ஐரோப்பியத் தமிழர் வாய்களில் சில ஆண்டுகள் முனு முனுக்கப்பட்டது.
ஆம் எம்மோடு பிரான்சிலிருந்து அந்த பட்டறையில் இணைந்த ராஜன் என்பவர் கைகளில் கொழுவி வைத்து அதன் அசைவுகள் மூலம் பேச வைக்கும் மொம்மை ஒன்றை பிரான்சில் இயங்கிய TTN தொலைக்காட்சியின் சிறுவர் நிகழ்வுக்காக எடுத்துச் சென்றார். அந்தப் பொம்மைக்கு அந்தப் பெயரான ஓவியா சூட்டப்பட்டு நீண்டகாலமாய் தொலைக்காட்சி நிகழ்வாய் வலம் வந்தது.
No comments:
Post a Comment
தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.