Pages

November 22, 2022

இயற்கையின் வணக்கம்


 எங்கள் தேசம் மட்டுமல்ல

எல்லாத் தேசமும் உங்களுக்காய்

சிவப்பும் மஞ்சளுமாய்

சிங்காரித்து நிற்கின்றன


வார்த்தைகளால் உங்களை நான்

வணங்கவும் தடை

சொற்கள் பார்த்து கோர்த்துதான்

சோதியானவர்களே உங்கள் புகழ் பாடும் நிலை


இயற்கை என் நிலை அறிந்து

இலை இதழ்களில் வர்ணம் தீட்டி

என் உள உணர்வினை 

எடுத்துச் சொல்கிறாள் இங்கு


#ஈழத்துப்பித்தன்

22.11.2022

கச்சானும் கனித்தோடையும்


 நிலக்கடலைக்கும் தேன் தோடைக்குமான கூட்டணியை குளிர் காலம் ஆரம்பிக்கும் காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் உணரமுடியும்.

அலுவலகங்கள், உணவகங்கள், வீட்டு வரவேற்பறை என எங்கும் இந்தக் கூட்டணியை காண முடியும். அதுவும் நத்தார் காலம் நெருங்கும் பொழுது இந்தக் கூட்டணியின் ஆதிக்கமும் அதிகரிக்கத் தொடங்கிவிடும். 

குளிர் காலத்தில் குளிரின் தாக்கத்தில் இருந்து எம்மை காத்துக்கொள்ள தேவையான கொழுப்புச்சத்தினையும் புரத த்தினையும் நிலக்கடலை தாராளமாகத் தருகின்றது. அதே போல் தேன்தோடை உடலுக்கு தேவையான உயிர்ச்சத்து c யினை அதிகம் தருகின்றது. இது குளிர்காலத்தில் ஏற்படும் சளித்தொல்லையில் இருந்தும் தடிமன் வராமலும் இருக்க உதவுகின்றது.

இரண்டையும் கலந்து சுவைத்தல் அபரிதமான சுவையாக இருக்கும்.

சுவைத்துப் பாருங்கள்.

கண்டனக்கவி

(சுவிற்சர்லாந்தில் வாழும் கவிஞர் 

ஒருவரின் அரங்க வெளிப்படுத்தலுக்கான என் பதில்.

இதனை சொல்லாது போனால் அவர் கூற்றுக்கு அங்கிருந்த நானும் துணையானவனாவேன்.)


அத்தனையும் முடிந்தது  என்ற பொழுதில்

விட்டு விட்டு ஓடியவரே

நீங்கள் 

பட்ட கடனும் சேர்த்து

படாத பாடு பட்டு

வட்டியோடு கட்டி வைத்தவர்கள் அவர்கள்

சரி் பிழை உண்டென்றாலும்

சகதியை வாரி இறைக்கும் உரிமை உமக்கில்லை

வாய் உள்ளது என்பதற்காகவும்

வல்ல தமிழ் துணை உள்ளது என்பதற்காகவும்

வசை பாடி விட்டு நீர் செல்ல  

கேட்டு கைதட்டி குதூகலித்து

வாய் மூடி இருப்பதற்கு நானும் 

மற்றவர் போல் அல்ல

புவிப் பந்தில் எனக்கும் அடையாளம் தந்தவன்

உமக்கு அடையாளம் தந்த அதே

பு லித்தாய் கருச் சுமந்து புறம் தள்ளியவன்தான்

விழி் நிமிர்த்தி பார்த்தோம் உங்களை - உங்கள்

வழி மீது தடம் பதித்தும் நடந்தோம்

வீணானவர்கள் நீங்கள் என்று நாம் 

எண்ணும் வகையில்

விடங்களை மனங்களில் பரவி விடாதீர்

வீணான வார்த்தைகளால் கல்லெறிந்து

மீண்டும் மீண்டும் குளங்களை குழப்பாதீர்

சீ இவர்கள் சில்லறைகள் என்று

உமை நோக்கி வாய் உமிழ வைத்துவிடாதீர்

பொது எதிரியை கை விட்டு விட்டு

கூடித் திரிந்தவனுக்கு சாபமிடாதீர்

அந்த அரங்கிலே பதில் சொல்லும் 

திடம் எனக்கு இருந்தாலும்

அரங்கை காக்கும் பொறுப்பு என் 

கரங்களில் இருந்ததால்

நாவடக்கிக் கொண்டேன்.

உடைத்தெறிவது சுலபம்

உருவாக்கி எடுப்பதுவே கடினம்

வல்லமை உண்டெனில் வாய் வீரம் காட்டாமல்

செயல் வீரராய் வாருங்கள்

சேர்ந்து வடம் பிடிப்போம்


#ஈழத்துப்பித்தன்

21.11.2022

November 19, 2022

ஈழத்தின் தொன்மையான இணுவை.


விஜயன் வருகைக்கு முன்னரே தமிழர் ஈழத்தை ஆண்டனர். ஆதாரங்கள் இணுவிலில்.


குமரிக்கண்டத்தில் அமைந்த தமிழ்ச் சங்கங்களில் ஒன்று இணுவிலில் அமைந்திருந்ததாகவும் அதன் எச்சங்கள் மண்ணுள் புதைந்துள்ளதாகவும் அவற்றை இன்றும் பூதங்கள் காப்பதாகவும் சிறு வயதில் மூத்தவர்கள் காவி வந்த செவி வழிச் செய்திகளினூடாக அறிந்துள்ளேன். 


அதனால்தான் அந்த மண்ணில் வேறெங்கிலும் இல்லாத அளவில் தமிழும் சைவமும் செழித்து வளர்வதாகவும், சிவனின் ஆட்சி நிலவும் சிவபூமியாக திகழ்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 


இன்று பார்த்தால் கொழும்பு தமிழ்ச் சங்கம் உட்பட உலகம் முழுவதிலும் தமிழ் சார் அமைப்புக்களையோ சைவ ஆலயங்களையோ நிறுவி தமிழ் சைவ பணிகள் தொடர வழி வகுப்பதில் முன் நிற்பவர்கள் இவ்வூரவர்களே.

அதனை மெய்ப்பிக்கும் வகையில் இணுவிலின் காரைக்கால் சிவன் கோவில் பகுதியில் அண்மையில் கேணி அமைக்க முயன்றபொழுது சிக்கிய கட்ட எச்சங்களும் தொல்பொருட்களும் அமைந்துள்ளன.

பல்லவர்களாலும் சோழர்களாலும் பராமரிக்கப்பட்ட பல்லாயிரம் ஆண்டு கடந்த காரைக்கால் சிவன் கோவில் வளாகத்திலேயே இத் தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இக்கோவில் பகுதி சித்தர்கள் வாழும் பகுதி எனப்படும். 

அந்தப் பகுதிக்குள் நுழைகின்ற போதே ஒரு பரவச நிலையையும் மன அமைதியும் ஒட்டிக்கொள்ளும். பல அற்புதங்களை நிகழ்த்திய அப் பகுதி இன்று பல அற்புதங்களை வெளிக்கொணரும் பகுதியாக ஈழத்தமிழர்களின் தொன்மத்தை மீட்கும் பகுதியாக அமைந்துள்ளது.

இந்த பகுதி என் தந்தை மற்றும் தாயார் வழி மூதாதைகள் பிறந்து வளர்ந்த பகுதி என்பதிலும் நாம் சிறுவயதில் உருண்டு புரண்ட பகுதிகள் என்பதிலும் பெருமையும் மகிழ்வும். 

#இணுவையூரான்

https://youtu.be/4O8V3tFn9GQ 

November 7, 2022

எழுச்சிக்கவி தெரிவுப் போட்டியில்...

 

இன்று தமிழீழ நினைவேந்தல் அகவத்தினால் சுவிஸ் தழுவியரீதியில் மா. வீரர் நினைவு சுமந்த கவிதைப் போட்டி எட்டாவது தடவையாக பேர்ண் மாநிலத்தில் நடாத்தப்பட்டது. 

இந்த போட்டிகளில் நான்கு பிரிவுகளில் சுமார் 47 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள். 

இதில் அதிமேற்பிரிவில் முதலிடத்தை பெறும் போட்டியாளருக்கு "எழுச்சிக்கவி" விருது வழங்கப்படும்.

இவ்வாண்டு நடைபெற்ற போட்டியின் நடுவர்களில் ஒருவராக கலந்து சிறப்பிக்கும் வாய்ப்பினை சுவிஸ் கிளையின் மா. வீரர் நினைவு அகவம் எனக்கு வழங்கியிருந்தது.

கடந்த ஆண்டே நினைவேந்தல் அகவத்தின் ஒருங்கிணைப்பாளர் மதியண்ணாவும் மதிப்பிற்குரிய சிவலோகநாதன் அண்ணாவும் அழைத்திருந்தார்கள். நான் பின்னின்றபோது நம்பிக்கையும் உற்சாகமும் தந்து உங்களைப் போன்ற இளையவர்கள் வர வேண்டும் அன்புக்கோரிக்கையை முன் வைத்தார்கள்.  சில தவிர்க்க முடியாத காரணத்தால் கடந்த தடவை என்னால் இறுதிக்கணத்தில் கலந்துகொள்ள முடியாது போய்விட்டது.

இம் முறை இவர்களெல்லாம் தந்த நம்பிக்கையை ஏற்று கலந்து கொண்டேன்.  

ஏற்கனவே பல பேச்சுப்போட்டிகள் மற்றும் தமிழ்த் திறன் போட்டிகளுக்கு நடுவராக சென்றிருந்தாலும் கவிதைப் போட்டிக்கு இதுவே முதற் தடவை. போட்டியாளர்களை விட என் மனம் பதை பதைப்பாக இருந்தது. தவறான முடிவுகளை கணித்துவிட்டால் அது திறமையானவர்களை புறம் தள்ளிவிடுமே என்ற பேரச்சம் மனம் முழுதும் நிலவியது.

போட்டியாளர்களை சீர்தூக்கவென லண்டனில் இருந்து நான் பெரிதும் மதிக்கும் கவிஞர் ராஜமனோகரன் அவர்களும் மூத்த படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார் இணைந்திருந்தார்கள்.  இருவரும் இவர்களுடன் சுவிஸ் தமிழ்க் கல்விச்சேவையின் ஒருங்கிணைப்பாளர் பார்த்தீபன் கந்தசாமி அவர்களும் உற்சாகமூட்டி தரவுகளை தந்து வழிகாட்டினார்கள்.

போட்டியாளர்களுக்கு பிரிவுகளுக்கேற்ப 40 முதல் 60 நிமிடங்கள் குறிப்பிட்ட தலைப்புகளில் கவிதை எழுத நேரம் வழங்கப்படது.

அதனையடுத்து அரங்கில் கவிதைபாட நேரம் வழங்கப்பட்டது.

போட்டிகள் அனைத்துமே சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. 

முடிவுகள் எடுப்பதில் கடுமையான போட்டியாக இருந்தது. 

நிறைவில் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எனது முடிவுகள் ஏனைய இரு நடுவர்களின் முடிவுகளுடனும் அச்சொட்டாய் பொருந்திப் போனது. 


யாருடைய திறமையையும் நான் தவறாக கணிக்கவில்லை என்ற மனநிறைவைத் தந்தது.


நடுவர்களாக கலந்துகொண்ட கவிஞர் இராஜமனோகரன் மற்றும் மூத்த படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார் ஆகிய பெரும் ஜாம்பவான்களோடு கத்துக்குட்டியான நானும்.