Pages

November 7, 2022

எழுச்சிக்கவி தெரிவுப் போட்டியில்...

 

இன்று தமிழீழ நினைவேந்தல் அகவத்தினால் சுவிஸ் தழுவியரீதியில் மா. வீரர் நினைவு சுமந்த கவிதைப் போட்டி எட்டாவது தடவையாக பேர்ண் மாநிலத்தில் நடாத்தப்பட்டது. 

இந்த போட்டிகளில் நான்கு பிரிவுகளில் சுமார் 47 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள். 

இதில் அதிமேற்பிரிவில் முதலிடத்தை பெறும் போட்டியாளருக்கு "எழுச்சிக்கவி" விருது வழங்கப்படும்.

இவ்வாண்டு நடைபெற்ற போட்டியின் நடுவர்களில் ஒருவராக கலந்து சிறப்பிக்கும் வாய்ப்பினை சுவிஸ் கிளையின் மா. வீரர் நினைவு அகவம் எனக்கு வழங்கியிருந்தது.

கடந்த ஆண்டே நினைவேந்தல் அகவத்தின் ஒருங்கிணைப்பாளர் மதியண்ணாவும் மதிப்பிற்குரிய சிவலோகநாதன் அண்ணாவும் அழைத்திருந்தார்கள். நான் பின்னின்றபோது நம்பிக்கையும் உற்சாகமும் தந்து உங்களைப் போன்ற இளையவர்கள் வர வேண்டும் அன்புக்கோரிக்கையை முன் வைத்தார்கள்.  சில தவிர்க்க முடியாத காரணத்தால் கடந்த தடவை என்னால் இறுதிக்கணத்தில் கலந்துகொள்ள முடியாது போய்விட்டது.

இம் முறை இவர்களெல்லாம் தந்த நம்பிக்கையை ஏற்று கலந்து கொண்டேன்.  

ஏற்கனவே பல பேச்சுப்போட்டிகள் மற்றும் தமிழ்த் திறன் போட்டிகளுக்கு நடுவராக சென்றிருந்தாலும் கவிதைப் போட்டிக்கு இதுவே முதற் தடவை. போட்டியாளர்களை விட என் மனம் பதை பதைப்பாக இருந்தது. தவறான முடிவுகளை கணித்துவிட்டால் அது திறமையானவர்களை புறம் தள்ளிவிடுமே என்ற பேரச்சம் மனம் முழுதும் நிலவியது.

போட்டியாளர்களை சீர்தூக்கவென லண்டனில் இருந்து நான் பெரிதும் மதிக்கும் கவிஞர் ராஜமனோகரன் அவர்களும் மூத்த படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார் இணைந்திருந்தார்கள்.  இருவரும் இவர்களுடன் சுவிஸ் தமிழ்க் கல்விச்சேவையின் ஒருங்கிணைப்பாளர் பார்த்தீபன் கந்தசாமி அவர்களும் உற்சாகமூட்டி தரவுகளை தந்து வழிகாட்டினார்கள்.

போட்டியாளர்களுக்கு பிரிவுகளுக்கேற்ப 40 முதல் 60 நிமிடங்கள் குறிப்பிட்ட தலைப்புகளில் கவிதை எழுத நேரம் வழங்கப்படது.

அதனையடுத்து அரங்கில் கவிதைபாட நேரம் வழங்கப்பட்டது.

போட்டிகள் அனைத்துமே சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. 

முடிவுகள் எடுப்பதில் கடுமையான போட்டியாக இருந்தது. 

நிறைவில் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எனது முடிவுகள் ஏனைய இரு நடுவர்களின் முடிவுகளுடனும் அச்சொட்டாய் பொருந்திப் போனது. 


யாருடைய திறமையையும் நான் தவறாக கணிக்கவில்லை என்ற மனநிறைவைத் தந்தது.


நடுவர்களாக கலந்துகொண்ட கவிஞர் இராஜமனோகரன் மற்றும் மூத்த படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார் ஆகிய பெரும் ஜாம்பவான்களோடு கத்துக்குட்டியான நானும்.

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.