Pages

October 18, 2021

இணுவையின் பெருவிழா

 

1960களில் எடுக்கப்பட்ட இணுவில் சிவகாமி அம்மன் கோவிலின் மானம்பூ வாழை வெட்டு உலாவின் நிழற்படம் இது.

இணுவில் நடைபெறும்  நடைமுறையிலான வாழை வெட்டு நிகழ்வு இணுவில் தவிர்ந்து வேறு பகுதிகளில் நடைபெறுவதாக நான் அறியவில்லை.

இணுவில் சிவகாமி அம்மனின் மானம்பூத் திருவிழா என்பது இணுவில் கிழக்கு மற்றும் இணுவில் மேற்கு எனும் இருப்பகுதிகளையும் இணைக்கும் பெருவிழாவாகும்.

இயல்பிலேயே இணுவில் கிழக்கு/மேற்கு என நிலவும் பனிப்போரை கருத்தில்கொண்டு அவற்றைக் களையும் முகமாகவே இருபகுதியையும் தொடர்புபடுத்தியே இணுவிலின் கோவில் திருவிழாக்கள் பண்டைய நாட்களில் திட்டமிடப்பட்டன. அவற்றில் பல நடைமுறைச் சிக்கல்களால் கால ஓட்டத்தில் வழக்கொழிந்து போனாலும் இணுவைக் கந்தனின் வேட்டைத் திருவிழா, இணுவை சிவகாமி அம்மனின் மானம்பூத் திருவிழா ஆகியன பண்டைய மரபு மாறாமல் தொடர்கின்றது.

இணுவிலில் உள்ள எல்லாக் கோவில்களிலும் வாழைவெட்டு நடைபெற்று நிறைவடை இருள் சூழும் நேரத்தில் அன்றைய நாளில் தீவெட்டிகள் புடைசூழ இன்று மின்னொளி ஒளி வீச பாயும் குதிரையில் சிவகாமி அம்மன் உலா வரப் புறப்படுவாள். இணுவில் கிழக்கில் இருந்து காங்கேசன்துறை வீதி கடந்து மேற்கு இணுவிலில் அமைந்துள்ள கந்த சுவாமி கோவில் சென்று, அங்கு அங்கு அழகுற அமைக்கப்பட்ட பெரு வாழையை வெட்டிச் சாய்த்த பின் மேற்கு இணுவை மக்களால் வழங்கப்படும் மரியாதையை ஏற்றுக் கொள்வாள். இரவிரவாக கலை நிகழ்வுகளும் சுடச் சுட பால்க்கோப்பியும் பலவிதமான பலகாரங்களில் பகிரலும் என விழா களை கட்டும் அதிகாலை நெருங்கும் வேளையில் அங்கிருந்து அம்பாள் புறப்பட்டு அன்றைய அமெரிக்கன் மிசன் பாடசாலை வீதியூடாக கிழக்கு இணுவிலுக்குள் நுழைந்து கோவிலை வந்தடைவாள். வீதிகள் தோறும் ஒவ்வொரு வீட்டுவாசலிலும் எல்லைமானப் பந்தல் அமைத்து நிறைகுடம் வைத்து அம்மனை வரவேற்று மகிழ்ந்து களிப்பார்கள்.


முதன் முதலாக 1987ம் ஆண்டு இந்திய இராணுவக்காலத்தில் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த விழா கடந்த சில ஆண்டுகளாக சிவகாமி அம்மனின் திருப்பணிகள் நடைபெறுவதால் நடைபெறவில்லை.

June 20, 2021

தன் மீது சுமத்தப்பட்ட வரலாற்றுக்கறையை திமுக துடைத்துக்கொள்ளுமா?

கால நகர்வு புலிகளை வரலாற்றில் இருந்து மறைத்துவிடும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதிப்போர் நடைபெற்று புலிகள் அழிக்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் புலிகளை வரலாற்று நீக்கம் செய்ய முடியாது தோற்றவர்கள் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகிவிட்டார்கள்.  


மிக உக்கிரமாக தமது புலிநீக்க அரசியல் நகர்வுகளை பல வழிகளிலும் ஆரம்பித்துவிட்டார்கள். அதன் வெளிப்பாடு சம நேரத்தில் பமிலிமான் 2, ஜகமே தந்திரம் திரைப்படங்களாகவும் திமுக அபிமானிகளின் மகிந்தவின் நண்பரனான நொயல் நடேசன், எரிக் சொல்கைம் போன்றவர்களுடான் நேர்காணல்களாயும் வெளிவரத் தொடங்கியுள்ளது. 


இறுதிப் போரில் தமிழினம் அழிய கலைஞர் துணை போனார் எனச் சொல்லப்படுவது சந்தர்ப்பவசமே என இன்றும் கலைஞருக்காக பச்சாதாபப்படும் ஈழத்தமிழர்களின் முகத்தில் கரி பூசும் செயலை திமுகவின் மாநிலத் துணைச் செயலாளர் இசை போன்றோர் கன கச்சிதமாய் செய்து வருகின்றார்கள்.


திமுக தலைமை, ஈழத்தமிழர் நலனே எனது நலன் என மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் திமுக ஆட்சியில் அங்கம் வகிக்கும் மதிமுகவின் பொதுச் செயலர் வைகோ போன்றோர் இனியும் அமைதி காக்காமல் இந்த வரலாற்று திரிப்பு முயற்சியை தடுத்து நிறுத்த ஆவன செய்ய வேண்டும்.


இன்றைய எரிக் சொல்கைமுடனான விவாதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் இவர்களின் மனநிலையைச் சொல்லும்.


இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா ??


1. ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் தான் கொன்றார்களா? 

எரிக் சொல்கைம்: ஆம், ராஜூவ் காந்தியை கொன்றது விடுதலைப் புலிகள் தான். இதை அன்ரன் பாலசிங்கம் என்னிடம் சொல்லியிருக்கிறார். 


2. ராஜூவ் காந்தியைப் போன்று அமைதி பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் முக்கிய பங்காற்றிய லக்‌ஷ்மன் கதிர்காமரையும் விடுதலைப் புலிகள் கொலை செய்தார்களே அதைப் பற்றி சொல்ல முடியுமா?


3. பிற தமிழ் போராளி குழுக்களையும் விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது பற்றிய உங்கள் கருத்து?


4. இறுதிக்கட்டப் போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு பிரபாகரனின் போர் வெறி தான் காரனமா? 


5. புலிகள் தங்களுக்கான நிதியை எப்படி திரட்டினார்கள்? போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுப்பட்டதாக சொல்லப்படுகிறதே?


6. அன்ரன் பாலசிங்கத்தின் பங்களிப்பு இல்லையென்றால் பிரபாகரன் ஒரு போர் நாயகனாகத் தானே விளங்கியிருப்பார்?


7. புலிகள் குழந்தைப் போராளிகளை வலுக்கட்டாயமாக போரில் சேர்ததது பற்றியும், அதன் காரனமாக சர்வதேச சமூகத்தில் தமிழர் பிரச்சனைகள் தொடர்பாக ஏற்பட்ட எதிர்மறைப் போக்கையும் பற்றி விவரிக்க முடியுமா?


8. ராஜூவ் காந்தி படுகொலை மூலம் விடுதலைப் புலிகள் செய்த வரலாற்றுப் பிழையால் என்ன விளைவுகள் உருவானது? (டான் அசோக்)


9. இறுதிக்கட்ட போர் முடிந்த 11 ஆண்டுகள் கழித்தும் விடுதலைப் புலிகளின் வன்முறை போக்கை ஆதரிப்பது ஈழத்தமிழ் குழந்தையிடத்தில் புத்தகத்தை பிடுங்கிக் கொண்டு துப்பாக்கியைக் கொடுப்பது போலாகாதா?


10. ஐரோப்பிய நாடுகளில், வெளிநாடுகளில் சொகுசாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்களால் ஈழத் தமிழர்களுக்கான தீர்வைத் தேடித் தர முடியுமா?


11. பிரபாகரனுக்கு நீங்கள் ஏதும் பரிசு பொருட்களைக் கொடுத்திருக்கிறீர்களா?

அப்படியேதும் கொடுத்ததில்லை என்ற கூறிய எரிக் சோல்ஹேம், அமைதி பேச்சுவார்த்தையில் அவர்களை தொடர்பு கொள்வதற்காக இலங்கை அரசின் ஒப்புதலோடு ரேடியோ ஸ்டேஷன் ஒன்றை வழங்கியதாக கூறினார். அதைக் குறிப்பிட்டு அரக்கர் கும்பலைச் சேர்ந்த ரவிசங்கர்,' புலிகள் அதை பாட்டு கேட்பதற்காக பயன்படுத்தியிருப்பார்கள்' என நக்கலடித்தார். 


12. துப்பாக்கிகளோடும், புலியோடும் புகைப்படங்கள் நிறைய எடுத்திருக்கிறாரே பிரபாகரன் ஒரு நாடக நடிகை மனோபாவம் உடையவரா (Is prabhakaram a drama queen)?


*****


ஒரு இன விடுதலையே அழிக்கப்பட்டு,நாதியற்று நிற்கும் அந்த இனத்தின் மீது இப்படி என்ன வன்மம் இந்த கும்பலுக்கு ???


தன் மீது சுமத்தப்பட்ட வரலாற்றுக்கறையை திமுக துடைத்துக்கொள்ளுமா?


@InuvaijurM

June 1, 2021

உருளும் உலகோடு... Twint


 சுவிற்சர்லாந்தில் நீண்டகாலமாக பாவனையில் இருந்து வந்தாலும் தற்பொழுது பெரும்பாலேனோர் உபயோகிக்கும் செயலியாக Twint செயலி உள்ளது.

இச் செயலியானது உள்ளூர்ப் பணப்பரிமாற்றத்துக்கு உகந்த விரைவான பாதுகாப்பான சேவையாகும். 

எமக்கு எந்த வைப்பகத்தில் கணக்கு உள்ளதோ அந்த வைப்பகத்தின் Twint செயலியை தரவிறக்கி அந்த வைப்பக்தின் இலத்திரனியல் உள்நுழைவு மூலம் செயலியினுள் நுழைந்து எமது கைப்பேசி இலக்கத்துடன் இணைத்துவிடவேண்டும். இதனூடாக Twint இணைப்பிலுள்ள இன்னொருநண்பருக்கு ஒரு வினாடியிலேயே பணத்தை இருந்த இடத்தில் இருந்து அனுப்பலாம் அல்லது பெற்றுக்கொள்ளலாம்.  அதாவது நாம் தொலைபேசி இலக்கத்துக்கு பணத்தை அனுப்பக்கூடிய வகையில்.

அதே போல் பெரும்பாலான கடைகள் தானியங்கி இயந்திரங்கள் அனைத்திலுமே ஒரே வினாடியில் பணத்தை செலுத்திவிட முடியும்.

இதற்கென எந்த விதமான கட்டணங்களும் செலுத்தத் தேவையில்லை.

மாறாக Twint பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக Twint எமக்கு இடைக்கிடை 10 முதல் 20 சுவிஸ் பிராங்குகளை அன்பளிப்பாகத் தரும். அது எமது பயன்பாட்டைப் பொறுத்து, அதற்கென சில செயற்பாடுகள் உண்டு அவற்றை நாம் இயங்கு நிலையில் வைத்திருத்தல் வேண்டும். 


வேகமாக நகரும் உலகோடு நாமும் நகர்வோம்.


(இது இலுமினாட்டிகளின் சதி என்று ஒருத்தன் கட்டுரையோடு வரப்போறான் 😂)

May 14, 2021

அட்சய திருதியை


இன்று அட்சயதிருதியையாம்அ
அட்சய திருதிகை
ஊரிலை கொண்டாடினதோ? 
எங்கடை அம்மம்மா 
சாமத்தியப்பட 
போட்ட தோடோடைதான் 
சாகும் வரைக்கும் இருந்தவா
அம்மப்பா கட்டின தாலி 
அவவின்ரை கழுத்திலை 
இருந்த நாளைவிட 
அடகுகடையிலை இருந்த 
ஆண்டுதான் கூடவாம்
ஆனாலும் அன்பும் மகிழ்வும்
அள்ள அள்ள குறையாமல் 
இல்லமெல்லாம் நிறைந்து
இன்பமாய் வாழ்ந்துதான் போனா

#ஈழத்துப்பித்தன்
21.04.2014


#மீள்

March 28, 2021

இன்று உலக நாடக நாளாம்...

 இன்று உலக நாடக நாளாம்...


என் பத்தாவது வயதில் நானும் என் வயதை ஒத்த என் அயல் நண்பர்களும் இணைந்து போர்க்காலத்தில் குமணன் என்ற அரச நாடகத்தை நாமே பழகி நடித்தோம். அது ஒரு சித்திரா பௌர்ணமி நாள். எங்கள் கிணத்தடி பிள்ளையார் கோவிலில் எங்கள் அயலவர்களில் வீடுகளில் இருந்த கட்டில்களை மேடையாக்கி அம்மாக்களின் சேலைகளை திரைச்சீலைகளாக்கி அரங்கமைத்து அழகாய் நடந்து முடிந்தது.

நான், ராஜி, சுதா, அரவிந்தன், நந்தன் இன்னும் ஓரிருவர். நாங்கள் ஒவ்வொருவரும் மூன்று நான்கு பாத்திரங்களை ஏற்று மாறி மாறி நடித்தோம். 

அதன் தொடர்ச்சியாய் அதே நாடகத்தை எமது பள்ளியிலும் எமது வகுப்பினர் இணைந்து நடிக்க திட்டமிட்டோம். அதில் இளங்குமணனான நானும் குமணனாக ஞானசொரூபனும் நடிப்பதற்கான ஒத்திகைகளை செல்வராணி ஆசிரியரின் வழிநடத்தலில் ஆரம்பித்திருந்தோம். அந்தவேளையில் நான் சுவிற்சர்லாந்துக்கு புலம் பெயர வேண்டிய தேவை ஏற்பட அந்த நாடகம் அப்படியே விடுபட்டு போனது.

சுவிற்சர்லாந்துக்கு வந்த பின் சுவிற்சர்லாந்தில் சட்டரீதியாக உருவான முதலாவது தமிழ்ப்பாடசாலை எம்மையும் இணைத்து உருவானது. 1992 ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும்  நடாத்தப்படும் கலைவாணி விழா மேடையில் நாமே நாடகங்களை பழகி நடிக்கத் தொடங்கினோம். சுவிசில் முதல் மேடை நாடகமாக சரஸ்வதி சபதம் நாடகம்.

என் 16வது் வயதில் “தவறு” என்ற நாடகத்தை கதை அமைத்து நானே எழுதி என்னோடு படித்த நண்பர் நண்பிகளை இணைத்து நடித்து முடித்து அனைவரது பாராட்டையும் பெற்றோம்.

அந்த நாடகம் எங்களை பாடசாலை அரங்கு தாண்டி வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியது.

அந்த நாடகத்தில் நடித்த அத்தனை பேரையும் இணைத்து அதே நாடகத்தை சிறு மாறுதல்களோடு  “யதார்த்தங்கள்” என பெயர் மாற்றி போட்டிக்கு அனுப்ப  எங்களை விட வயதில் மூத்த ஒருவருடன் சிலர் வந்தார்கள். எனது கதையமைப்பு எனது இல்லை என்றானது. அன்று அதை உறுக்கிக் கேட்கும் நிலையில் நான் வயதில் முதிர்ந்து இருக்கவில்லை. 

தொடர்ச்சியாக பல நாடகங்கள் போட்டிகளுக்காகவும் சுவிசின் பல பாகங்களிலும் நடைபெற்ற அரங்க நிகழ்வுகளுக்காகவும் நடிக்க தொடங்கினோம்.

அந்தவேளையில் சுவிற்சர்லாந்தின் நாடகத்துறையிலும் சுவிஸ் கலைபண்பாட்டுக் கழகத்தின் நாடகத்துறை பொறுப்பாளருமான சிறீ அண்ணாவின் கண்களில் நாம் தட்டுப்பட அவரது்நாடகங்களில் எனக்கும் நடிப்பதற்கான வாய்ப்புகள் அவர் மூலம் கிடைத்தது. எமது ஒரு நாடகம் மட்டும் சுவிசின் 13 மாநிலங்களில் மேடையேறியது.

நிறைவாக அனைவரும் ஒருமுறையாவது  ஏறிவிட வேண்டும் என ஏங்கும் மாவீரர் மேடையில் 2002 முதல்  நாடகம் நடிக்கும் பெருவாய்ப்பும் தொடர்ச்சியாய்க் கிடைத்தது. 

2012 வரை 50க்கும் மேற்பட்ட நாடகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஊடகப் பதிகளால் தொடர்ந்து நாடகங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்புகள் அமையவில்லை. 

நாடகங்களின் தொடர்ச்சியாய் பல மேடைகளை உருவாக்கித் தந்த சிறி அண்ணா தனது  அடம்பன் திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தார்.  அவரது அடுத்த திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்புத் தந்துள்ளார் தற்போதைய இடர்காலத்தால் அதன் காட்சிப்படுத்தல்கள் தாமதித்துக் கொண்டிருக்கின்றன...

(இது 1997 இல் “தாய் மண்ணே தனி இன்பம்” எனும் நாடகத்தில்.. அற்றார் அழிபசி தீர்த்தல் போட்டி நிகழ்வில்... மீசை முளைக்காத வயதில் மீசையோடு)



March 9, 2021

பெண்ணே உசார்!!!


வாழ்த்துகள் தோழி என்று
வாயாரப் புகழ்ந்து நிற்பார்
பெண் இன்றி எதுவும் இல்லை என்று
பேசியே கழுத்தறுப்பார்
ஆணுக்கு பெண் நிகரல்ல
அதற்கும் மேல் என்பார்
வீட்டு வேலை எல்லாம் நீங்களா?
வீணாப் போன புருசனென்பார்
பிள்ளை குட்டி புருசனோடு மகிழ்வது - மனம்
பிடித்த வாழ்க்க இல்லை என்பார்
கட்டற்ற பாலியற் சுதந்திரமும்
கருத்துரிமையும் பெண்ணுக்கு உண்டென்பார்
மீட்பர் தாம் தான் என்று
மீண்டும் மீண்டும் கூறி நிற்பர்
வேட்டுகள் வைத்து உன் விருப்புடனே
வேட்டையாடி உன் வாழ்வை சிதைத்து விட்டு!
தன் வீட்டு பெண்ணை பூட்டி வைத்துவிட்டு
தரணிக்கே வகுப்பெடுப்பார்
பெண்ணியம் பேசும் ஆண்களிடம்
பெண்களே உசார்!
ஆணாதிக்கம் கொண்டோரை விட
அதிக விசம் இவர்கள்...

#ஈழத்துப்பித்தன்
09.03.2021 

January 24, 2021

வெள்ளிப்பனி சொரியும் காலம்

 


குழந்தைகளுக்கான இலக்கியத்தில் எமது புது முயற்சி. நாம் வாழும் தேசத்தின் வாழ்வைப் பாட முயன்றுள்ளோம். வரவேற்று உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை/விமர்சனங்களை முன் வையுங்கள். அது எம்மை வளம்படுத்தும்.

இணுவையூர் மயூரனின் ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் நூலில் இடம்பெற்ற பனிக்காலப் பாடல்.

„வெள்ளிப்பனி சொரியும் காலம்“

வரிகள்: இணுவையூர் மயூரன் (ஈழத்துப்பித்தன்)

இசை: ப.கருணாகரன்

பாடியோர்: க.சதுர்சிகா, இ.தர்சிகா

ஒலிப்பதிவு: யோகம்மா கலையகம் முல்லைத்தீவு

ஒருங்கிணைப்பு: குமாரு யோகேஸ்

காட்சிப்பதிவு: தேன்மொழி, மயூரன், மகிழினி

வெளியீடு: மகிழம் படைப்பகம் - சுவிஸ்

தயாரிப்பு: பாசல் தமிழ்ச் சங்கம் - சுவிஸ்

பகிர்ந்து Subscribe செய்து நல்லாதாரவு நல்குமாறு அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.


https://youtu.be/I5WN7BuSdOg

January 17, 2021

நோர்வே மாட்டுக்கு நான் வைச்ச தமிழ்ப் பெயர்

 

கடந்த 2001ம் ஆண்டளவில் ஒரு பயிற்சிப் பட்டறைக்காக நோர்வே நாட்டின் Hammer என்ற நகருக்கு சென்றிருந்தேன். 

அங்கு மலையும் ஆறும் விவசாய நிலங்களும் கூடிய அழகான கிராமமொன்றில் தான் தங்கினோம். நாம் தங்கியிருந்த வீடு கூட ஒரு பண்ணை வீடு. இயற்கை வழி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்பட்ட பகுதி அது. 

உலகமயமாக்கல் - சூழல் பேணல் - இயற்கை விவசாயம் இந்த தலைப்புகளை மையப்படுத்தி எமது பட்டறை ஒருங்கிணைக்கப்பட்டதால் அந்த இடம் தெரிவாகியிருந்தது.

நாம் தங்கியிருந்த இடம் ஒரு பண்ணை வீடு என்பதால் அதன் சூழலில் வீட்டு விலங்குகளின் வளர்ப்பும் இருந்தது. மிகப் பெரிய மாட்டுத் தொழுவமும் பல மாடுகளும் அங்கு இருந்தன. நாம் போயிருந்த அந்த வாரத்தில் அங்குள்ள மாடு ஒன்று கன்று ஈன்றுவிட்டது. நாம் அங்கு நின்ற வேளையில் மாடு கன்று ஈன்றதால் அந்தக் கன்றுக்கு தமிழில் ஒரு பெயரைச் சூட்ட வேண்டுமென அந்த பண்ணை உரிமையாளர் விரும்பினார். 

அந்தப் பொறுப்பை எம்மிடம் தந்துவிட்டார். நோர்வே பண்ணைகளில் ஒரு வழக்கமுண்டு தாய்ப்பசுவின் முதல் எழுத்தின் தொடர்ச்சியாகவே கன்றுக்கு பெயர் அமைய வேண்டும். அங்கே அந்த தாய்ப்பசுவின் பெயர் O என்ற ஆங்கில எழுத்தில் அமைந்திருந்தது அதே எழுத்து முதல் எழுத்தாய் அமையும் வகையில் பெயரொன்று வேண்டுமெனக் கேட்டிருந்தார்.

ஒப்பிலாள் என்ற பெயரை நானும் ஓவியா என்ற பெயரை் வேறொருவரும் முன்மொழிந்திருந்தோம். நிறைவாய் எம்மோடு இணைந்திருந்த அவுஸ்திரேலியா வாழ் அன்றைய டென்மார்க் பல்கலைக் கழகத்தின் விவசாயத்துறை விரிவுரையாளராயிருந்த பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா மற்றும் நோர்வேயின் கவிஞர் சோதியா கனடா பார்த்தீபன் ஆகியோர் தலைமையில் எடுக்கப்பட்ட இறுதித் தீர்மானத்தின் படி எனது முன்மொழிவான ஒப்பிலாள் என்ற பெயர் சூட்டப்பட்டது.

அந்த ஓவியா் என்ற இரண்டாவது பெயரும் இதே பயணத்தின் தொடர்ச்சியாய் வேறொரு இடத்தில் சூட்டப்பட்டு ஐரோப்பியத் தமிழர் வாய்களில் சில ஆண்டுகள் முனு முனுக்கப்பட்டது.

ஆம் எம்மோடு பிரான்சிலிருந்து அந்த பட்டறையில் இணைந்த ராஜன் என்பவர் கைகளில் கொழுவி வைத்து அதன் அசைவுகள் மூலம் பேச வைக்கும் மொம்மை ஒன்றை பிரான்சில் இயங்கிய TTN தொலைக்காட்சியின் சிறுவர் நிகழ்வுக்காக எடுத்துச் சென்றார். அந்தப் பொம்மைக்கு அந்தப் பெயரான ஓவியா சூட்டப்பட்டு நீண்டகாலமாய் தொலைக்காட்சி நிகழ்வாய் வலம் வந்தது.

January 14, 2021

தைப்பொங்கல் 2021

 

அன்புக்குரிய உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வாசலிலே வண்ணக் கோலம் 
வடிவழகாய் பூக்கட்டும்!
வான் அரசன் கதிரவனும்
வந்து நின்று பார்க்கட்டும்!
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பொங்கட்டும்!
வந்தது தை என்று
வாழ்த்தொலிகள் பரவட்டும்!
வண்ணத் தமிழ் இனிக்க
வரவேற்கும் பண்பு தொடரட்டும்!
மஞ்சள் இலை இஞ்சி இலை
மங்கலத்தை கூட்டட்டும்!
மயில்த் தோகை விரிந்தது போல்
மாக் கோலம் ஒளிரட்டும்!
மாவிலையும் தோரணமும்
மகிழ்ந்து எங்கும் ஆடட்டும்!
மத்தாப்பாய் புன்னகைகள்
மலர்த்து எங்கும் வீசட்டும்!
மண் உழுத உழவர்
மாண்பு எங்கும் பரவட்டும்!
துன்பங்கள் தொலைந்து எம் வாழ்வில்
இன்பம் என்றும் நிலைக்கட்டும்!
இணுவையூர் மயூரன்
#ஈழத்துப்பித்தன்
01.2021
அன்புடன்
இணுவையூர் மயூரன்

January 7, 2021

அடையாளம்

 


தமிழர் தங்கள் அடையாளங்களை பேணுவது அல்லது மீட்டெடுப்பது அல்லது தக்க வைப்பது சிலருக்கு தமது இன அடையாளங்களை அழித்துவிட வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலாய் அமைகின்றது. 


அதன் வெளிப்பாடு வேட்டி நாளை கொண்டாடியவர்கள் கோவணநாளை கொண்டாடுவார்களா எனத் தொடங்கி பல வழிகளிலும் தமது எதிர் மனநிலையை கக்கத் தொடங்கியுள்ளார்கள்.


இத்தகைய கொண்டாட்ட மனநிலையூடாக அநாகரீக உடை என ஒதுக்கப்பட்ட வேட்டி கொண்டாட வேண்டிய உடை என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் விதைக்கப்படுகின்றது.


சில காலங்களாக திருமணங்களில் கூட மாப்பிளை வேட்டி கட்டுவதை தவிர்த்து வடநாட்டு உடைகளுக்கு மாறும் கொடுமைகள் எம் இனத்தில் மட்டுமே நிகழும் மிகப்பெரும் அடையாளத் தொலைப்பாகும்.


சிங்களவர்கள், யூதர்கள், சீக்கயர்கள், முஸ்லீம்கள், ஆபிரிக்கர்கள் இந்தியாவின் ஏனைய மாநிலத்தவர்கள் எவர்களுமே தங்கள் பாரம்பரிய ஆடை அணிவதை, அதை கொண்டாடுவதை பெருமையாக நினைக்கின்றார்கள். எந்த வசதி படைத்தவர்களாக இருந்தாலும் தங்கள் குடும்ப, பண்பாட்டு விழாக்களில் தங்கள் பாரம்பரிய உடைகளைத்தான் அணிகின்றார்கள்.


மன உறுதியையும், ஒருவித திமிரையும், கெத்தையும், அழகையும், கம்பீரத்தையும் தரும் வேட்டி என் பண்பாட்டு உடை என்பதை பெருமையோடு சொல்வேன். வாய்ப்புக் கிடைத்த தருணங்களிலும் வாய்ப்பை உருவாக்கியும் அணிவதில் மகிழ்வும் பெருமையும் கொள்கின்றேன்.


தைக்காமால் ஒரு உடை அணியப்படுகின்றது என்றால் அது தமிழனின் பாரம்பரிய உடையாக மட்டுமே இருக்கும்.


தாழ்வு மனப்பாண்மையை தகர்த்தெறிந்துவிட்டு எங்கள் அடையாளங்களை கொண்டாடுவோம்.


நன்றி வணக்கம்