Pages

December 29, 2020

இந்தியா நோக்கி முதலாவது உலாத்தல் பகுதி 2



பேஸ்புக்கை திறந்தபோது பேரதிர்ச்சி காத்துக் கிடந்தது. சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது என்ற செய்தியும் படங்களும் குறிப்பாய் விமான நிலையத்தினுள் புகுந்த வெள்ளக்காட்சிகளும் எங்கும் விரிந்து கிடந்தது.  எல்லாவற்றுக்கும் மேலாக பேஸ்புக் ஆய்வாளர்களின் சென்னை நகரை கடல் காவுகொள்ளப் போகின்றது என்ற ஆய்வுக்கட்டுரைகளும் பயங்காட்டிக்


பயணத்தை நிறுத்திவிடலாம் என்றாலும் பயணச்சீட்டுக்கு செலுத்திய பணமும் திரும்பாதே என்ற யோசனையாக இருந்தது. 

இரண்டு கிழமை இருக்கு, சரி ஊருக்குதானே; முதலில் அங்கு போவம் பிறகு நிலமையைப் பொறுத்து இந்தியப் பயணத்தை திட்டமிடுவோம் என முடிவெடுத்தாச்சு. 

இரண்டு வாரத்தில் சென்னையில் வெள்ளம் வடிந்து இயல்புக்குத் திரும்பியிருந்தது. நானும் திட்டமிட்டபடி கத்தார் வழியாக கொழும்பு நோக்கி எனது பயணத்தைத் தொடர்ந்தேன். 



பாபநாசம் திரைப்படத்தோடு கத்தார் விமானச்சேவையின் பயணம் தொடர்ந்தது. காலை ஐந்து மணிக்கு வேலை முடிய அப்படியே வந்து 6.00 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு சூரிச் விமான நிலையம் சென்று அங்கிருந்து காலை 10.00 மணிக்கு கத்தார் நாட்டின் டோகா நோக்கிப் பயணம் பின் அங்கிருந்து கொழும்பு இதுதான் பயணவழி. ஊர்போகின்றேன் என்ற நினைப்பு முதல் நாள் நித்திரை இல்லாத களைப்பும் தெரியாதளவு உற்சாகமாயிருந்தது. 


விமானப் பயணமும், மருத்துவமனையில் இருப்பதுவும் ஒரேமாதியான சிந்தனையோட்டமாக இருக்கும் எப்ப சாப்பாடு வரும்? என்ன சாப்பாடு வரும்? 

கத்தார் விமானச்சேவையில் தரமான சுவையான உணவுகள் தரப்பட்டன. அதுவும் டோகாவில் இருந்து கொழும்பு பயணிக்கும் விமானத்தில் தரப்பட்ட சிவப்புப் பச்சை அரிசியிலான பாற் சோறும், கோழிக்கறியும், கட்ட சம்பலும் மிகச் சுவையாக இருந்தது. 




விமானத்தையும் விட வேகமாக மனம் ஊர் நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. அதிகாலையில் கொழும்பு விமான நிலையத்தைச் சென்றடைந்தேன். தம்பி (சித்தியின் மகன்) அழைத்துச் செல்ல வந்திருந்தான். அன்றே இந்திய விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு ஊருக்குச் செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். இந்திய விசாவுக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது...

இந்தியா நோக்கி முதலாவது உலாத்தல் 1

 


முதலாவது இந்தியப் பயணத்துக்கு... 1


டிசம்பர் முதலாந் திகதி  2015 அதிகாலை 11.00 மணிக்கு என் கைத்தொலைபேசி அலறியதுஎன்ன 11.00 மணிஅதிகாலையா் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றதும் அந்த நேரம் நான் இரவு வேலை செய்துகொண்டிருந்தேன்அதிகாலை 5.00 மணிக்குதான் வேலை முடியும்வந்து ஆறு மணிக்கு நித்திரைக்கு போனால்11.00 மணி என்பது அதிகாலைதானேம் தொலைபேசியை தூக்கிப் பர்த்தேன் என் வேலையிடத்திலிருந்துதொலைபேசி இணைப்பை ஏற்படுத்துவதற்கிடையில் ஆயிரம் எண்ண ஓட்டங்கள்


ஏற்கனவே ஒருவர் மருத்துவ விடுப்பில் நின்றதால் 14 நாட்கள் விடுமுறை இல்லாமல் தொடர் வேலைஇன்றுதான் 14 நாட்களுக்கு  பின் விடுமுறைநாளாக அமைந்ததுஅந்த விடுமுறைக்கும் ஆப்போ என்றமனச்சோர்வவோடே இணைப்பை ஏற்படுத்தினேன்வழமையான குசல விசாரிப்புக்களுக்குப் பின் பொறுப்பாளர்விடயத்துக்குள் நுழைந்தார்உனக்கு 5வாரமேலதிக விடுமுறை உள்ளதுஅதனை ஜனவரிக்குள் எடுத்து முடிக்கவேண்டும்அதனை நீ விரும்பினால் இன்றிலிருந்தே எடுத்துக் கொள்ளலாம் என்றுநான் முன்னர் வேலை செய்யஇடத்தில் மூன்று பேர் வேலைஎப்போதும் இருவர் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்நான்கு நாள் வேலைஇரண்டுநாள் விடுமுறை என அட்டவணை சுழலும்அதனால் நாம் எமக்கு நீண்ட விடுமுறைகள் தேவைப்படின்எங்கள் பொதுவிடுமுறையில் கை வைக்காமல் ஒவ்வொருவரின் அட்டவணையை அடுத்தவர் பொறுப்பேற்றுசெய்வோம்அதனால் எனக்கு ஆண்டுதோறும் நீண்ட நாள் விடுமுறை அடிக்கடி வரும்அந்த விடுமுறைகளுக்குஉலாத்திக் கொள்வேன்அதனால் பொதுவிடுமுறை அப்படியே சேர்ந்திருந்தது.


சரி அதற்காக இன்றிலிருந்தெல்லாம் விடுமுறை எடுக்கேலாது இரண்டு வாரத்தில் எடுக்கறேன் என முடிவைசொல்லிவிட்டு இணையத்தில் விண்ணூர்திக்கான பயணச் சீட்டுக்களை பார்க்கத் தொடங்கினேன்தமிழகம்போவதற்காக திட்டமிட்டேன்அந்த வேளையில் அம்மாவும் சகோதரியும் தமிழகம் சென்றிருந்தனர்அதே நேரம்2016 நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கும் போய் வரலாம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும்திட்டத்தோடுஆனால் அதிலும் ஒரு சிக்கல் இந்தியாவுக்கான உள் நுழைவு விசா எடுக்க வேண்டும்சுவிசில்விசாக்கு கொடுத்தால் இரண்டு வாரத்துக்கு மேலாகும் பின்னர் நத்தார் காலம் நெருங்கிவிடும்பயணச்சீட்டுக்கள்அதிகவிலையாயிருக்கும் அத்நோடு கிடைப்பதும் அரிது


சரி இலங்கை போய் அங்கே விசா எடுத்து இந்தியா போவதென திட்டமிடப்பட்டதுஉடனடியாக இலங்கைக்குவிமானச் சீட்டைப் பார்த்தேன் 14ந் திகதி புறப்படும் விமானத்துக்கு 850 சுவிஸ் பிராங்குக்கு விமானச் சீட்டுஇருந்ததுஉடனடியாக வங்கி மூலம் பணத்தைச் செலுத்தி  உறுதிப்படுத்திவிட்டேன்பயணம் உறுதிமற்றும்குறுகிய நாள் என்பதால் காப்புறுதி கூடச் செய்யவில்லைஎல்லாவற்றையும் முடித்துக்கொண்டு பேஸ்புக்கில்நுழைந்தேன்பேரதிர்ச்சியான செய்தி காத்துக்கிடந்தது....

December 10, 2020

காரிய விசருகள்...

 


இங்கு காரிய விசருகள் 
கனக்க உலாவுது
எட்டியும் உதைக்கேலாது
கட்டியும் பிடிக்கேலாது
கவனமாகத்தான் கையாள வேணும்.

காரிய விசருகள் 
கனவேலை செய்யுங்கள் 
கூரிய கத்திபோல் அதுகளை
கையாள வேணும்
நேரிய பார்வையோடு
இதுகளை நெருங்கவும் முடியாது

நாகு கண்ட காளைபோல் 
தலையாட்டியாட்டி நின்றே
காரியம் பார்த்திடுங்கள்
காரியம் முடிந்ததும்
கூரிய கத்தி கொண்டு
நெஞ்சினில் பாய்ச்சிடுங்கள்

நம்பினால் நட்டாற்றில்
விட்டிடுங்கள் 
எதிர்பாரா வேளையில் 
மாடியிலிருந்து பிடித்துத் 
தள்ளுவது போல்
பொறுத்த நேரத்திலே
மனத்தை உடைத்திடும்
வேலையும் பார்த்திடுவார்

இங்கு
காரிய விசருகள் இங்க 
கனக்க உலாவுது...
கவனமாகத்தான்
கையாளவேணும்...

#ஈழத்துப்பித்தன்
16.07.2020


December 6, 2020

கச்சல் கோப்பியும் காச்சின கசிப்பும்

 கச்சல் கோப்பியும் காச்சின கசிப்பும்

**********************************



நேற்று சுவிற்சர்லாந்தின் மத்தியில் அமைந்துள்ள கிராமமொன்றுக்கு சென்றிருந்தேன். அழகான விவசாயக் கிராமம்.

ஏற்கனவே மூன்று தடவை அந்த இடத்துக்கு சென்றிருக்கிறேன். ஒரு தடவை வசந்தகாலத்தின் ஆரம்பநாட்களிலும் இரண்டாவது தடவை கோடையின் இறுதிக்காலத்திலும் நேற்று பனிக்காலத்தின் ஆரம்பத்திலும் சென்றிருந்தேன். ஒவ்வொரு காலத்துக்கும் அந்தந்தக்காலத்துக்கான அழகோடு அந்தப் பகுதி மிளிரும்.

நான் சென்ற இடம் ஒரு விவசாயக் குடும்பத்தின் பண்ணை. பரந்து விரிந்த வயலின் நடுவே அந்த பண்ணை வீடு அமைந்துள்ளது. கடந்த தடவை சென்றபோது அறுவடைக்கு தயாராயிரிந்த சோளமும், கோதுமையும் இம்முறை அறுவடை செய்யப்பட்டு வயல்வெளி கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறுந் தரையாகக் கிடந்தது. பண்ணை வீட்டோடு உள்ள தொழுவத்தில் ஆடு, மாடு, குதிரை, முயல் போன்ற வீட்டு விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. 

அதன் அருகேயுள்ள குடியிருப்பில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வரும் அந்தக் குடும்பம் மூன்று தலைமுறை உறுப்பினர்களோடு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றார்கள். தற்போதய பண்ணையை நிர்வகிக்கும் விவசாயியான தோமாஸ் அவரது மனைவி மற்றும் அவரது தாய் தந்தை அவரது வளர்த்த மூன்று பிள்ளைகள் என அவர்களது குடும்பம் விரிகின்றது. கடந்த தடவை அவரோடு அவரது குடும்பம் பற்றி உரையாடியபோது தலைமுறை தலைமுறையாக தாம் விவசாயக்குடும்பம் எனவும் தற்போது தனது பிள்ளைகளில் ஒருவர் கணனி பொறியியற்துறையில் கற்கையை முடித்து வேலை செய்வதாகவும் மகள் பெண்களுக்கான மருத்துராவதற்கான மருத்துவக்கல்வியின் இறுதியாண்டிலும் ஒரு மகன் கல்விகாலம் நிறைவடைந்ததும் விவசாயத்தை்பொறுப்பேற்று நடத்த ஆர்வங்கோண்டு ஓய்வுநேரங்களில் தன்னோடு   இணைந்து வயல் மற்றும் பண்ணை வேலைகளையும் கவனிப்பதாக பெருமையோடு கூறினார்.

நகர்ப்புற மனிதர்களின் வாழ்வை வைத்து இதுதான் சுவிஸ்நாட்டவர்களின் வாழ்வியல் என அறிதியிட்டுக்கொள்வோர் நிச்சயம் கிராமங்களுக்குச் சென்று அந்த மக்களின் வாழ்வியலைக் காணவேண்டும். அவர்களின் குடும்ப அமைப்பை, இப்படித்தான் வாழல் வேண்டும் என்ற அவர்களின் வாழ்வின் வரைபைக் காணலாம்.

போன ஒவ்வொரு தடவையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆச்சி ஊத்தும் கோப்பியை காச்சின கசிப்புக் கலந்து அன்போடு பருகத் தந்து விருந்தோம்பி அனுப்பி வைப்பார்கள். கச்சல் கோப்பியும் காச்சின கசிப்பும் சுவிசின் கிராமங்களின் அதி உன்னத பானமாகும். சீமை நாவல் (செரி), பேரிக்காய் அல்லது குமுளிக்காய் (அப்பிள்) ஆகியவற்றிலிருந்து காய்ச்சி எடுக்கப்படும் மதுவானது மதுசாரம் மிகவும் அதிகமானது. அதில் சுமார் 80 %வரையான மதுசாரம் இருக்கும். மருந்துபோல் பயன்படுத்துவார்கள். ஒரு கோப்பை சூடான கறுப்புக் கோப்பியில் ஒரு தேக்கரண்டி அல்லது ஒரு மூடி மதுவை கலந்து அதே சூட்டோடு குடித்தால் நெஞ்சுச்சளி, தடிமன் போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும். குளிர்காலத்தில் இதனை பருகினால் குளிரைத்தாங்கும் கதகதப்பை உடல்பெற்றுக்கொள்ளும். உணவுச் செமிபாட்டையும் துரிதப்படுத்தும். கிட்டத்தட்ட எங்கள் ஊரில் குழந்தைகளுக்கு கிறேப் வாட்டர் பருகக் கொடுப்பதைப்போல.

சுவிஸ் மக்களும் வாழ்வும்

November 22, 2020

மலாய் அன்ரி அவிச்ச அரிசிமாப்புட்டு


உண்ணலும் உலாத்தலும் என் இரு கண்கள் இது உலகம் அறிஞ்ச ரகசியம்.

எங்கை போகத் திட்டமிட்டாலும்  அந்த இடங்களைப்பற்றி அறிய முதலே அங்கே என்ன என்ன சாப்பாடு கிடைக்குமென தேடிப் பட்டியலிடுவதே எனது முதற் கருமம்.

இப்படியாக நான் போகுமடங்களில் தேடித்தேடி அந்தப் பிரதேசங்களில் அடையாள உணவுகளையும் அங்கு கிடைக்கும் சிறப்பு உணவுகளையும் உண்பேன்.

இப்படித்தான் கடந்த 2017 இல் மலேசியா போன போது ஒரு நாள் சட்டிச் சோறு சாப்பிட்டுருந்தேன் அதன் சுவைக்காகவே கடந்த ஆண்டு மீண்டும் ஒரு தடவை இருநாள் பயணமாக மலேசியாவுக்கு போனது தனிக்கதை.

இப்படி சாப்பிட்ட சட்டிச் சோற்றின் சுவையால் ஈர்க்கப்பட்டு மறுநாளும் போனால் அன்று அந்தக் கடை பூட்டு முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு லிட்டில் இந்தியா வீதியில் அலைந்த என் கண் எதிரே மலேசியா மலாய் அன்ரி ஒருத்தி வீதியில் வைத்தே குழல் புட்டவிக்கும் காட்சியைக் கண்டதும் சொர்க்கமே கண்ணெரே தெரிந்தது போல் இருந்தது. 

சரி என்று போனா கடை வாசலில் வைத்து புட்டு அவிபடுது. வெள்ளை அரிசிமாப் புட்டும் குரக்கன் மா புட்டும் குழலாத தள்ளத் தள்ள ஆவி பறக்க விற்பனை சூடுபிடிக்குது. சரியென்று நானும் புட்டுக்கு சொல்லீட்டு இருந்தா முதல் சுற்றுக்கு வெள்ளை அரிசிமாப் புட்டும் வாழைப்பழமும் சர்க்கரை தூளும் வந்துது. அடுத்த சுற்றுக்கு திரும்பிப் பார்த்தா அத்தனை வகை கறியும் இருந்துது. விரும்பியதை எடுத்து வந்து சாப்பிடலாம்.

இரண்டாம் சுற்றை மீன்குழம்பு கத்தரிக்காய்/உருளைக்கிழங்கு பொரியலோடையும் குழைச்சு பிடிச்சு அடிச்சிட்டு வந்தன். அடுத்தநாள் வரை நின்று பிடிச்சுது.

சும்மா சொல்லக்கூடாது புட்டுக்கு பிரபலமான யாழ்ப்பண, கேரளா புட்டு எல்லாம் சாப்பிட்டிருக்கிறன் அதெல்லாத்தையும் விட விட மலேசியன் புட்டு மிருதுவாகவும் சுவையாகவும் இருந்துது. 


புட்டு பற்றி புட்டுப் புட்டு வைப்பேன்


புட்டு பற்றிய ஆய்வுக்காக


புட்டுப் பிரியன் மயூ

November 21, 2020

புட்டுப் பற்றிக் கொஞ்சம் புட்டு வைக்கப் போறன்


அரிசிமாவை வறுத்து 
அதிலை தண்ணி சேர்த்து
திரட்டிக் கொஞ்சம் எடுத்து
பேணிச்சுண்டு கொண்டு 
சுளகில் போட்டுக் குத்தி
பிடைச்சு அத பிரிச்சு 
தேங்காய்ப்பூ கலந்து 
நீத்துப்பெட்டி எடுத்து
அதில அத நிரப்பி 
ஆவியிலை வைச்சு 
மூடி போட்டு அவிச்சு 
ஓலை பெட்டி எடுத்து
அதிலை அதை கொட்டி 
மூலைப்புட்டை அள்ளி
வாயிலை போட்டுப் பாரு

காலை நேரம் உரலை
மெல்லக் கொஞ்சம் நிமித்தி
பொரிச்ச மிளகாய் போட்டு
வெங்காயம் சேர்த்து 
பழப்புளியும் கலந்து
தேங்காய்ப்பூ போட்டு
இடிச்ச சம்பல் எடுத்து
அள்ளிப் புட்டை பிடிச்சு
கொஞ்சம் தின்று பாரு

கத்தரிக்காய் வெட்டி
உருளைக்கிழங்கு சேர்த்து
வெங்காயம் தூவி
ஆனைக்கோட்டை எண்ணை
அதிலை கொஞ்சம் விட்டு 
நல்லாப் பொரிச்சு எடுத்து
புட்டில் கொஞ்சம் கலந்து
கையில் அள்ளிப் பிடிச்சு
கொஞ்சம் தின்று பாரு

ஊர் முட்டை எடுத்து
உப்பு மிளகு சேர்த்து
நாலு ஈர்க்குச் எடுத்து
நல்லா நுரைக்க அடிச்சு
பச்சை மிளகாய் வெட்டி
வெங்காயமும் அறுத்து
வதங்கலாக பொரிய
அடிச்ச முட்டை சேர்த்து
அதிலை புட்டை போட்டு
அள்ளித் தின்று பாரு

நண்டு நாலு எடுத்து
நல்லா வதக்கிப் பிரட்டி
ஊர்த் தூளும் போட்டு
உறைப்பாக் கறி வைச்சு
கூப்பன் மாவை அவிச்சு
அரிச்சு குழைச்சு அவிச்ச புட்டு
மேலை கொஞ்சம் ஊத்தி
குழைச்சு அடிச்சுப் போட்டு
மிச்சக் கறிச் சட்டி 
அதிலை கொஞ்ச புட்டை
பிரட்டித் தின்று பாரு

முக்கனிகள் மூன்றில்
வாழைப்பழம் எடுத்து
தயிர் சீனி சேர்த்து
தளர்வாய் கொஞ்சம் பிசைந்து
கிள்ளித் தின்று பாரு
கறுத்தக் கொழும்பான் சீவி
அரிசிமாவு புட்டை
அதிலை கொஞ்சம் கொட்டி
பிசைந்து தின்னு பாரு

கீரைப்புட்டு
ஒடியல்புட்டு
உழுத்தம்புட்டு
பாற்புட்டு
இன்னும் பல இருக்கு
நேரம் கொஞ்சம் மட்டு
அதனாலை போட்டு
வாறன் பிறகு 
புட்டு பற்றி இன்னும்
புட்டுப் புட்டு வைப்பேன்

#ஈழத்துப்பித்தன்

November 3, 2020

இலையுதிர்காலம் 1



வண்ணங்கள் பேசும் மாதம் 

வானவில் தோன்றும் மாதம் 

எண்ணங்கள் சிறகடிக்கும் மாதம் 

என்றும் இன்பம் சூழும் மாதம்


பகலை இரவு தின்னும் மாதம் 

பகலவன் ஓய்வு கொள்ளும் மாதம்

உணர்வுத் திசுக்கள் உயிர்க்கும் மாதம் 

சிசுக்கள் சில உருவாகும் மாதம்


குளிரும் வெயிலும் உரசும் மாதம் 

கூதல் மெல்ல மெய் வருடும் மாதம்

மேனி குளிரை உணரும் மாதம் 

சின்னத் தூறல் சிதறும் மாதம்


பொன்மணி போல் இலைகள் உதிரும் மாதம் 

பெண்மணிகள் மேனி மூடும் மாதம்

முன்பனிக்கு அழைப்பு விடுக்கும் மாதம் என்

பணிக்கு சோதனை தொடங்கும் மாதம்


#ஈழத்துப்பித்தன்

இலையுதிர்காலம் 2


கொடி முந்திரிகைக் குலைகள்கொ

ய்து போக அழைப்பு விடுக்கின்றன

குமளிச் செடிகளோ திரண்ட காய்களின்

கன்னங்கள் சிவந்து நாணி நிற்கின்றன

உலுப்பிக் கொட்டிய மூளைக் கடலை விதைகள் 

திசைகள் எங்கும் பரந்து தின்ன அழைக்கின்றன

ஊசி இலை மரங்கள் முன் பனி தாங்கத்

திடங்கொண்டு தினவெடுத்து நிற்கின்றன

இலை காய்ந்து சருகாகி உக்கிய பின்னும்

ஈரம் காயாது பூசணி திரண்டு கிடக்கின்றது

சுட்ட மரோனிக் கொட்டைகளின் வாசம்

நாசிகளை நிறைத்து சூடேற்றி அழைக்கின்றது

திட்டுத் திட்டாய் முடி சொரிந்த இளைஞன்போல்

வான் மறைத்த மரங்கள் வடிவு இழந்து நிற்கின்றன

பழுத்த இலைகள் விண்ணுக்கும் மண்ணுக்குமாய்

பரமபதம் ஆடி ஆடி பார்வைக்கு விருந்தாகின்றன

வான மகள் இருண்டு கறுத்து அழுது வடிக்கிறாள்

வானவில்லில் ஆரம் கட்டி வலிந்தும் சிரிக்கிறாள்

ஆடை இழந்து அம்மணமாய்க் கிடக்கும் மரங்களும்

தற்காலிக போர்வையோடு அழகொழிரும் தரையுமாய்

இலையுதிர்காலம் இனிதாய் நகருது இங்கு...


#ஈழத்துப்பித்தன்


 

May 9, 2020

சாமைச்சோறு

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பாரம்பரியமான உணவு கட்டாயம் இருக்கும். அவை மறைந்து இன்று கொத்து ரொட்டிதான் ஈழத்தமிழரின் பாரம்பரியமான உணவு என உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

அனேகமாக அன்றைய காலத்தில் அந்தந்த ஊர்களில் கிடைக்கும் மூலப் பொருட்களை கொண்டே தத்தமது உணவுத் தேவைகளை ஒவ்வொரு பிராந்தியத்தினரும் நிவர்த்தி செய்து வந்தார்கள். ஈழத்தில் தென்மராட்சி தொடக்கம் வன்னிப் பிராந்தியம் தாண்டிய தமிழர்களின் பிரதான உணவாக அரிசிச்சோறு இருந்த போதிலும் நெல் விளையாத யாழ்ப்பாணத்தின் ஏனைய பிராந்திய மக்களின் உணவுத்தேவையின் பெரும் பகுதியை சிறு தானியங்களே நிவர்த்தி செய்து வந்தன.

குறிப்பாக பணப்பயிராக புகையிலையையும் உணவுத் தேவைக்காக சாமை, குரக்கன், பயறு போன்ற தானியங்களையும் பிரதானமாக மரவள்ளி கருணை கிழங்குகளோடு ஏனைய மரக்கறிகளையும் பயிரிட்டு விளைவிக்கும் பகுதியாக இணுவில் கிராமம் இருந்து வந்தது.

நான் சிறு வயதாக இருந்தபோது மஞ்சள் வர்ணத்தில் கொத்தாக தலை சாய்த்து ஆடும் சாமைக் கதிர்களையும் குவிந்து குறண்டிய கரம்போன்று ஆடும் குரக்கன் கதிர்களையும் இணுவில் பகுதிகளில் அதிகம் கண்டிருக்கிறேன். சாமைக் கதிர்களை உருவி அதனுடன் கூடிய தும்புகளை ஊதித் தள்ளிவிட்டு அப்படியே வாயில்போட்டுச் சப்ப அபரிதமான சுவையாயிருக்கும. சாமைக்க கதிர் பற்களுக்குள் அரைபட்டு பால்போல கடவாய்களால் வழியும்.

அதே போல ஓங்கி வளர்ந்து உயர்ந்து நிற்கும் மரவள்ளிச் செடிகள் அந்தக்காலத்தில் நாம் ஒழித்துப் பிடித்து விளையாடும் இடங்களாயிருந்தன. நிரை நிரையாக உயர்ந்து வளர்ந்து மூடி நிற்கும் அந்தச் செடிகளிடையே ஒழித்து ஓடுவது இனிதாயிருக்கும். மரமிருக்க கிழங்குகளை பிடுங்கிச் சுட்டுத் தின்ற வரலாறுகள் பல இணுவிலாரின் மறைக்கப்பட்ட பக்கங்களுக்குள் முடங்கியிருக்கின்றது.

ஒரு காலத்தில் இணுவிலாரின் பிரதான உணவுத் தேவைகளை இந்த சாமை, குரக்கனும் மரவள்ளியுமே தீர்த்து வந்தன.

எழுபதுகள் வரை பிரதான மதிய உணவாக சாமைச் சோறும் மரவள்ளிக் கிழங்குமே இருந்து வந்தது. நெல் அரிசிச் சோறு என்பது எப்போதாவது அபூர்வமாக உண்ணும் ஒரு உணவாகவே தமக்கு இருந்ததாக அப்பா அடிக்கடி சொல்வார்.

கூப்பன் அரிசி, கூப்பன் மாக்களின் வரவு சாமை, குரக்கன்களை ஓரங்கட்டி இன்று வழக்கொழியச் செய்துள்ளது.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் எப்போதாவது ஓரிரு தடவை அபூர்வமாக சாமைச் சோறு சாப்பிட்டிருக்கிறேன். சத்து மிக்கதும் சுவையானதுமாகும்.

சாமைச்சோறும் மீன் குழம்பும் மரவள்ளி கிழங்கு தூள் போட்ட கறியும் இணுவை மண்ணின் பாரம்பரியமான உணவாகும். இன்று எத்தனை பேருக்கு இது தெரியுமோ தெரியாது.

அந்த கையில் இன்று எங்கள் ஊரின் பாரம்பரிய உணவான சாமைச்சோறும், விளைமீன் குழம்பும், மரவள்ளி கிழங்கு கறியும் அத்தோடு நெத்தலி, விளைமீன் பொரியலும்.

இதைப் பார்த்து கஸ்ரப்பட்டவன் யாராவது கலங்கி சாமை விதைக்க திடசங்கற்பம் பூண்டால் பெரிதும் மகிழ்வேன்.

#இணுவையூர்_மயூரன்
#நளபாகம்

பி.குறிப்பு: இந்த சாமை அரிசி சுவிசில் தமிழ்க் கடைகளில் கிடையாது. இந்த நாட்டின் பிரபலமான வர்த்தக நினுவனங்களான கோப், மிக்கிறோஸ், மனோர் போன்ற கடைகளில் கிடைக்கின்றது. Hirse எனும் பெயரில் கிடைக்கும்.

April 26, 2020

யாழ்ப்பாண வேலி

என்னவோ சொல்ல வெளிக்கிட்டு கடைசியா
*******************************************
#என்ரகத


இந்த வேலிகளை பார்க்கையில் பலருக்கும் பல நினைப்புகள் வந்து போகும்.

இந்த வேலிகளுக்கு நிறைய வரலாறுகள் உண்டு. நிறைய விடயங்களுக்கு இந்த வேலிகளே தூதாகவும் ஏன் சாட்சியாகவும் கூட இருந்துள்ளது. சில விடயங்களுக்கு இந்த வேலிகளே குறியீடாகவும் இருக்கின்றன. எல்லாத்துக்கும் மேலாக இந்த வேலிகளால் சண்டைகள் ஏற்படாத வீடுகளே இல்லை எனலாம்.

வேலி உயர்த்திக் கட்டிய வீடுகளில் குமர்கள் உண்டு என்பதும் சீற் உயர்த்தி சைக்கிள் பெடியள் அடிக்கடி வந்து போனால் மறுநாளே ஒரு அடுக்கு கிடுகு உயர்வதும் யாழ்ப்பாண வேலிகளுக்குள்ள முக்கிய அடையாளமாகும்.

இந்த வேலிகளில் பலவிதமான வேலிகள் உண்டு. கிடுகு வேலி, மட்டை வேலி, ஓலை வேலி, தகரவேலி,கம்பி வேலி, அலம்பில் வேலி, தூண் நிறுத்திய முள்க்கம்பி வேலி போன்றவை இதில் முக்கியமானவையாகும்.

இதில் கிடுகு வேலிகள் பின்னப்பட்ட தென்னோலைகளால் அடைக்கப்படும். ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி குத்தூசியால் கயிறு கொண்டு கட்டி இவ்வேலி அமைக்கப்படும். இது கொஞ்சம் செலவு குறைவு பாவனை காலமும் குறைவு. அடுத்து ஓலை வேலிகள், இந்த ஓலை வேலிகள் மிதித்து நேராக்கப்பட்ட்ட பனையோலைகளை குறுக்காக சரிவாக வைத்து அடைக்கும் முறை, இதன் ஆயுள்காலம் கிடுகு வேலியின் ஆயுட்காலத்தைவிட அதிகமானாலும் யாழ்ப்பாணத்தார் அதிகம் விரும்புவது என்னவோ கிடுகு வேலிகளைத்தான். அடுத்து மட்டை வேலிகள் இவை மூரி வேலிகள் என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த மூரி வேலிகள் பனையோலை நீக்கப்பட்ட மட்டைகளை ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து அடுக்கி கம்பியால் வரித்துக்கட்டப்படும். இது நீண்ட கால ஆயுளைக்கொண்டது. செலவு கொஞ்சம் அதிகமானது. அந்தநாட்களில் பெரும்பாலும் வசதி படைத்தவர்களின் வேலிகளே மட்டைவேலியாக வரியப்படும். இந்த மட்டை வேலிகளின் மீது சில அடுக்கு கிடுகுகளால் வரிந்துவிட்டால் கொள்ளை அழகாக இருக்கும். இந்த மட்டை வேலிகளின் கீழ்ப்பகுதியை கறையான் அரிக்காதவாறு கழிவு எண்ணையால் வர்ணம்போல் தீட்டிவிடுவோரும் உண்டு.

இந்த வேலிகளில் யாழ்ப்பாணத்து வேலிகள் எப்போதுமே தனி அழகுதான். பிரதேசவாதம் என்று ஆரன் கிழம்பி வந்தாலும் அதுதான் உண்மையும், அதற்கு அந்தக் காணிகளின் அளவுகளே முக்கிய காரணம். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் காணிகள் இரண்டு முதல் ஆகக்கூடியது ஐந்து பரப்பு வரைதான் இருக்கும். அப்படியான அளவைக்கொண்ட காணிகளை அச்சறுக்கையான அழகான வேலிகளை அமைத்து பராமரிப்பது சுலபம்.

இந்த வேலி அடைப்புக்கும் சில விதிமுறைகள் உண்டு. இரண்டு காணிகளுக்கு நடுவேயுள்ள வேலியை அடைக்கும்போது அரைவாசி வேலியை ஒரு காணிக்காரரும் மறுபாதி காணியை ஒரு காணிக்காரருமாக அடைப்பார்கள். அப்படி அடைக்கப்படும் போது அரைவாசி வேலி ஒருகாணியின் உட்புறமாயும் மறுபாதி வேலி வெளிப்புறமாயும் இருக்கும்.

அனேகமான யாழ்ப்பாணத்து வேலிகளை கிளுவங் கதியால்களே அலங்கரித்து இருக்கும். முன்னர் பூவரசு, வாதராணி, முள்முருங்கை, சீமையில் கிளுவை போன்றவை அதிகளவில் இடம்பிடித்திருந்தன. இந்த வாதராணி இலை புளியம் இலை சாயலில் இருக்கும் அந்த இலை மருத்துவ குணம் மிக்கதென்று அம்மா அடிக்கடி அதில் வறை வறுப்பா. பூவரசும் வாதராணியும் விரைவாக மொத்தித்துவிடும், முள்முருங்கை மற்றும் பூவரசில் மயிர்க்கொட்டிகளின் தொல்லை என்பதாலும் காலப்போக்கில் அவை வெகுவாக குறைவடைந்துவிட்டன. இந்த கிளுவை நீண்டகாலத்துக்கு சிம்ரன் போல இருக்கும் என்பதால் பிற்காலத்தில் கிளுவை முற்றுமுழுதாக ஆக்கிரமித்துக் கொண்டது. எல்லைகளை நிர்ணயிக்கும் பகுதிகளில் தொடர்ச்சியாக பூவரசுகளே நிலைத்திருந்தன.

புகையிலை பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் ஊர்களின் வேலிகளில் அதிகளவு பூவரச மரங்கள் இருந்தன. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் இந்த பூவரசங் கிளைகள் வெட்டப்பட்டு தோட்டக்காணிகளில் குழைகள் பசளைக்காக தாழ்க்கப்படும். பின்னர் புகையிலை நட்டு வளர்ந்து வெட்டிய பின் அந்த குழைகள் உக்க மிஞ்சிக் கிடக்கும் தடிகள் கிழறி எடுக்கப்படும். அப்பம்மா வீட்டடியில் இலைகள் வெட்டிய பின் சாற்றிக் கிடந்த பூவரசந் தடிகளால் அருளானந்தத்தார் இந்திய இராணுவத்தால் நையப்புடைக்கப்பட்டது இன்னமும் கண்களில் நிழலாடுகின்றது.

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எங்கள் பகுதிகளில் இந்த வேலி அடைத்தல் காலம் வரும்போது எமக்கெல்லாம் கொண்டாட்டமாயிருக்கும். நாங்களும் பங்காளர்களாக இருப்போம். அனேகமாக கூலிக்கு ஆள்ப்பிடிப்பதெல்லாம் கிடையாது. எங்கள் பகுதியில் பெண்கள் இணைந்துதான் வேலி அடைப்பார்கள். வேலிகளை பார்த்து சரிந்த கதியால்களை நேராக்கி புதிய கதியால் இட வேண்டிய இடங்களுக்கு புதிய கதியாலிட்டு வேலி அடைக்கப்படும். அடைத்த வேலிகளில் சிறு பொட்டு அமைத்து குறுக்குப்பாதைகள் அமைக்கப்படும். எங்கள் பிராந்தியத்தவர்கள் சிவகாமி அம்மன் கோயிலுக்கு விரைவாகப் போவதற்கான பொட்டு எங்கள் வேலியில் அமைந்திருந்தது. நாம் சிறுவர்களாக இருந்தபோது சில அப்புமார் பொட்டுக்குள் குனிந்து போவதை பின்னுக்கு நின்று வாய்பிழந்து பார்த்து சிரிப்பம். பொட்டுக்குள் பூந்த புழுக்கொட்டி துரையப்பரின் வாயிலிருந்து புழுக்கொட்டியதைப்போல் விழுந்த செந்தமிழ் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்...

சரி விடயத்துக்கு வாறன் என்னவோ சொல்ல வெளிக்கிட்டு கடைசியா இவ்வளவு நீட்டி முழங்கீட்டன். இந்த வேலிகள் சார்ந்து பலருக்கும் பலவிதமான அனுபவங்கள் இருக்கும்.

எனக்கு மட்டைவேலிகளை கண்டா தடியாலை இழுத்துக்கொண்டு ஓடுவதென்றா கொள்ளை விருப்பம். தட தட என்ற அந்த சத்தத்துக்காக திரும்ப திரும்ப என்று பல தரம் இழுப்பேன். பதினொரு வயது வரை ஊரிலை இருந்த உனக்கு வேலிதாண்டின காதல் கதையோ இருக்குமென்று நீங்கள் முனுமுனுப்பது கேக்குது.

பதினொரு வயதில் ஊரை விட்டு சுவிசுக்கு புலம்பெயர்ந்த நான் என் அஞ்ஞாதவாசம் முடித்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின் என் 23 வது வயதில் ஊரில் கால்பதித்தபோது பாதைகள் எல்லாம் ஒடுங்கி வேலிகள் வீதியின் நடுப்பகுதிகள் வரை வந்திருந்தை கண்டபோது அதிசயமாக இருந்தது. பூமி சுற்றுவது உண்மைதான் என்பதை உறுதியாய் நம்ப ஆரம்பித்தேன்.

அப்படி ஊரில் நின்ற ஒரு நாளில் இரவு ஒன்பது மணியிருக்கும் இணுவில் அங்களப்பாயில் உள்ள அத்தை வீட்டிலிருந்து இருந்து எங்கள் வீட்டுப் பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்தேன். தர்மலிங்கத்தாரின் கடைக்கு அருகே இருந்த ஒழுங்கைக்குள் நுழைந்து நடக்க மட்டை வேலியொன்று தென்பட்டது நிலத்தில் ஒரு தடி 80களின் திரைப்படங்களில் வருவதுபோல என் கண்கள் மட்டை வேலியையும் தடியையும் மாறி மாறி பார்த்தது. உருக்கொண்டவன் போல குனிந்து தடியை எடுத்து தட தடவென இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கினேன். அந்த வீட்டு நாய் வேலியையும் தாண்டி குரைத்துக்கொண்டு கலைக்கத் தொடங்கியபோதுதான் சுயநினைவுக்குத் திரும்பினேன். தண்டவாளக் கரை வரை ஓட்டம் தொடர்ந்தது.

இப்ப ஊருக்கு போனாலும் மட்டை வேலியை கண்டால் கை துருதுருப்பது தவிர்க்க முடியாதது. கடந்த பயணத்தில் மகளுக்கு சின்ன வயசில் நாங்கள் இப்படித்தான் என்று தடிகொண்டு இழுத்துக்காட்டி என் அவாவை தீர்த்துக்கொண்டேன். அனேகமாக பேரப்பிள்ளையோடு போகும் காலத்திலும் இது தொடரும் போல... அதற்கு வேலியும் இருக்க வேண்டுமே...:

#இணுவையூர்_மயூரன்
25.04.2020

மட்டை வேலியில் தட்டி மகிழ்ந்ததும்
தகரப் படலையில் தடிகொண்டு அடித்ததும்
பொட்டுப் பிரித்து மரவள்ளி கிளப்பியதும்
பூவரசந் தடியால் அடிதர அம்மா கலைத்ததும்
பொக்கிசமாய் இன்னும் நினைவில் கிடப்பன...

(ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் நூலின் கவிதையொன்றிலிருந்து )

வேலி சார்ந்த உங்கள் அனுபவங்களையும் எடுத்து வாருங்கள்.

April 13, 2020

சித்திரை தமிழ்ப் புத்தாண்டு

இன்று மாலை ஐரோப்பிய நேரம் 15.56க்கும் இலங்கை இந்திய நேரம் 19.26க்கும் வீறியெழல் (சார்வரி) ஆண்டு பிறக்கின்றது.

தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லப்படும் இந்த சித்திரைப்புத்தாண்டானது சித்திரை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகின்றது. பண்டைய காலத்தில் உலகம் முழுவதும் சித்திரை மாதமே புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தமைக்கு பல சான்றுகள்  எச்சங்களாக உள்ளது.

குறிப்பாக 16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர் கூட ஏப்ரல் முதலாந் திகதியைதான் புத்தாண்டாகக் கொண்டாடி வந்துள்ளார்கள்.

1562 ம் ஆண்டளவில் அன்றைய போப்பாண்டவர் கிரகரி  பழைய ஆண்டுக்கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகரியன் முறையை நடைமுறைப்படுத்தினார். அதன் படி ஜனவரி 1 புத்தாண்டு நாளாக மாற்றம் பெற்றது.

எனினும் இந்தப் புதிய புத்தாண்டு நாளை ஐரோப்பிய தேயங்களும், அவற்றின் மக்களும் உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் பல காலம் ஆனது. பிரான்ஸ் 1852 ஆம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660 ஆம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700 ஆம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752 ஆம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு நாளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

இந்த புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதலாந்திகதி புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்தார்கள். இதலிருந்து ஏப்ரல் முதலாந்திகதி முட்டாள்கள் நாள் என மாற்றம்பெற்றதாக பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

முட்டாள்கள் என்ற பழிப்புக்கு ஆளாகாமல் இருக்க உலக மக்கள் ஜனவரி முதலாந்திகதியை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டார்கள்.

இன்றும் இலங்கை, தமிழ்நாடு, மலேசிய தமிழர்கள், சிங்கப்பூர் தமிழர்கள், மொறீசியஸ் தமிழர்கள். கம்போடியர்கள், தாய்லாந்து நாட்டவர்கள், பர்மா, வியட்நாமியர்கள் சித்திரை முதல்நாளைதான் தமது புத்தாண்டுநாளாக கொண்டாடி வருகின்றார்கள். இந்த நாடுகள் பல்லவ/சோழ அரசுகளின் ஆளுகைக்குள்ளோ ஆட்சிக்குள்ளோ உட்பட்டிருந்த தேயங்களாகும்.

புத்தாண்டு பற்றிய கதைகள் பல இடைச்செருகல்களாக வந்து போனாலும் தமிழர்களும் ஏன் உலகமக்களும் பன்னெடுங்காலமாக சித்திரை/ஏப்ரல் முதல்நாளையே தமது புத்தாண்டாக கொண்டாடி வந்துள்ளார்கள்.

கடிகாரத்தின் இரண்டு முட்களும் இணையும் நள்ளிரவு 12 மணியை நாளின் துவக்கமாகக் கொள்வதுபோல் 5122 ஆண்டுகளுக்கு முன் சூரியனும் பிற கிரகங்களும் நேர்கோட்டில் வந்த காலத்தில் துவங்கியது மேட ராசி வரும் சித்திரை ஆண்டுக்கணக்கு.

சூரியனின் சுழற்சியை (360 பாகை) ஆட்டை வட்டம் என்பார்கள். இந்த வட்டம் எந்த இடத்தில் எந்த மாதத்தில் ஆரம்பிக்கிறது என்பதுதான் இங்கு முக்கியம்.

சூரியனின் சுழற்சியில் முதலில் வருவது மேட ராசி வரும் சித்திரை என்கிறது தமிழ் இலக்கியம்.

இந்த மேட வருடை என்பது ஒரு மலை ஆட்டின் பெயர்.

பரிபாடல் 11-
 ‘வருடையைப் படி மகன் வைப்ப’ என்கிறது.

இதன் பொருள்: வருடை என்னும் மேட ராசியில் சூரியன் நுழைகிறது.

மேட ராசி என்பது சித்திரை மாதத்தில் வரும் ராசி.

இதனை நெடுநல்வாடை வரி 160-161 மேலும் தெளிவாக சொல்கிறது:  

“திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து “

இதன் பொருள். ஆட்டினைத் தலைமையாகக்கொண்டு சூரியன் விண்ணைச்சுற்றி வருகிறான் என்று.

இந்த வருடை ஆடு என்பது மலை ஆடு.

இதையொட்டியே  ஆண்டின் காலம் வருடம் என அழைக்கப்படுகிறது.

தமிழக அரசின் மாநில விலங்கு வருடை ஆடு, அந்த ஆடு இதனைத்தான் குறிக்கின்றது.

பண்டைய நாகரீகங்களையும் வரலாற்று தொன்மங்களையும் காவி வருபவர்கள் தமிழர்களே ஆதலால் தமிழர் புத்தாண்டு சித்திரை ஒன்றுதான்.

கொண்டாட்டங்கள் மனதுக்கு மகிழ்வை தருபவை. இந்த இடர்காலத்தில் கொண்டாடி மகிழ்ந்து மனம் கனக்கும் துன்பங்களுக்கு விடை கொடுப்போம்.

அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு  (நல்வாழ்த்துகள்.  (5122 ம் ஆண்டு)

தொகுப்பு
#இணுவையூர்_மயூரன்

March 22, 2020

கொரோனா தந்த வாழ்வு



கடந்த பத்து நாட்கள் ஏதோ நகர்கிறது என்ற ரீதியில் வாழ்க்கை நகர்கின்றது.

காலை வேலை தபாற்துறை சார்ந்த வேலை என்பதால் கட்டாயம் செல்ல வேண்டும். அதன் பின் வீடும் சமையல், சாப்பாடும் இடைக்கிடை வாசிப்பும் தமிழ்கன் புண்ணியத்தால் புதுப்படங்களும் பிள்ளைகளுடன் குதூகலிப்புமாய்  பொழுது கழிகின்றது.

இடையில் இரு நாட்கள் அத்தியாவசிய பொருட் கொள்வனவு, அதுவும் காலை 9.00 மணிக்கு எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்கு சென்றால் பால், முட்டை, மா, இறைச்சி வகை அத்தனையும் முடிந்திருக்கும். இன்றுவரை அப்படித்தான்.

பொதுப் போக்குவரவு ஊர்திகளில் இப்போ நாம் அழுத்தாமல் அதுவாகவே கதவை திறக்கும். அப்படியே முட்டாமல் ஏறி வடிவேலு பயணஞ் செய்ததுபோல கம்பிகளில், கைபிடிகளில் பிடிக்காமல் ஆடி அசைந்து ஒருவாறு இலக்கை எட்டி வேறு பிராந்தியங்களிலுள்ள கடைகளில் தேவையானவற்றை வாங்க முடிகின்றது. சிலவேளை கடையின் அளவுக்கேற்பதான் உள்ளே அனுமதிப்பார்கள் இலக்கம் பெற்று காத்திருந்து உள் சென்று பொருட்களை எடுத்து வந்து பணஞ் செலுத்த வந்தால் அங்கும் குறைந்தது இரண்டு மீற்றர் இடைவெளி விட்டு காத்திருந்துதான் பணம் செலுத்தி வரலாம்.

ஒருவர் முகத்திலும் மகிழ்ச்சியில்லை. தென்னாலி கமல் சொன்னது போல எதைப் பார்த்தாலும் பயம் யாரைப் பார்த்தாலும் பயம் யாராவது செருமினாலும் பயம் அருகே வந்தாலும் பயம் கதவு கைபிடி தொடப் பயம் இப்படி நூறு பயம்.

ஊரே சா விழுந்த வீடுபோல மயான அமைதி. நித்தம் என் பொழுதுக்கு விருந்தாகும் எங்கள் வீதி பிரான்சையும் சுவிசையும் இணைக்கும் பிரதான வீதி. எப்போதும் கல கலப்பாயிருக்கும். இப்போ தன் சோபை இழந்து கிடக்கிறது.

பத்து நாட்களுக்கு முன் பள்ளி விட்டு வீடு வந்த பிள்ளைகள் இன்னும் படி தாண்டி வெளியே செல்லவில்லை. இந்த மாதம் அவர்கள் பெரும் எதிர் பார்ப்போடு ஆறு மாதங்களாய் காத்திருந்த மாதம். வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் சிறார்களுக்கு சிறகு முளைக்கும் மாதம் இது. குளிர் முடிந்து வசந்தம் வீசத் தொடங்கிவிட்டது செரி மரங்களும் மங்கோலியன் மரங்களும் மரம் தெரியாமல் பூத்துக் கிடக்கின்றன. குங்கும மலர்களும் ஈஸ்ரர் மணி மலர்களும் போட்டி போட்டு நிலபாவாடை விரித்து நிற்கின்றன. இந்த அழகை ரசிக்க காத்திருந்த எவரிடமும் இன்று அந்த மனநிலை இல்லை.

சில நூறு மீற்றர் தொலைவில் வசிக்கும் அம்மா அப்பாவை சென்று பார்க்கவும் சட்டமில்லை. பேரமக்களை பார்க்க வேண்டும் என்று நித்தம் அவர்கள் வெளிப்படுத்தும் ஆசையையும் தீர்க்க முடியவில்லை. பயத்தை தின்றவர்கள் நாம் என்று போலியாய் ஒரு முகமூடி தரித்து வலிந்து சிரிக்கிறோம்...

சிலபேர் முள்ளிவாய்க்காலுக்கும் இதுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள் அது வேறு இது வேறு என்பதை உணராமல்

நம்பிக்கை இன்னமும் உள்ளதால் நகர்கிறோம்...

#இணுவையூர்_மயூரன்