Pages

September 15, 2025

மதிப்பளிப்பு 2025


 14.09.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகம் (IITA)வின் வெள்ளி விழா நிகழ்வும் பட்டமளிப்பு விழாவும்.

த.தே. தலைவரின் தொலை நோக்குச் சிந்தனையில் பேராசிரியர். கார்த்திகேசு சிவத்தம்பி தலைமையில் சுவிற்சர்லாந்தி்ல் கடந்த 2000மாம் ஆண்டு ஐரோப்பா வாழ் கலையாசிரியர்களை ஒருங்கிணைத்து பயிற்சிப்பட்டறையும் கலந்துரையாடலும் நடாத்தப்பட்டது. அதன் இறுதி இலக்காக “அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகம்” தோற்றம் பெற்றது.


2000மாம் ஆண்டு “பூபாளம்” எனும் கலை நிகழ்வினூடாக “அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகம்” மக்கள் மத்தியில் அறிமுகமானது.


இந்த அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகமானது நுண் கலை பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளை நடாத்தி 2012 இல் முதலாவது மதிப்பளிப்பு நிகழ்வை சூரிச் மாநிலத்தில் நடாத்தியது.


முதலாவது பட்டமளிப்பில் நடன மற்றும் வாய்ப்பாட்டுத்துறையில் தரம் ஏழு வரை தோற்றிச் சித்தியடைந்தோருக்கான “கலை வித்தகர்” என்ற பட்டயம் வழங்கி மதிப்பளிக்கப்படார்கள்.


பின்னைய காலங்களில் நுண்கலைகளான மிருதங்கம், வயலின், வீணை போன்ற வாத்தியங்களை பயிலும் மாணவர்கள் தொகை அதிகரிக்க அத் துறைகளுக்கான தேர்வுகளும் நடைபெறத் தொடங்கின.


இந்த ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பிலே பரதம், வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம் ஆகிய பாடங்களில் தங்கள் கற்கையை நிறைவு செய்த மாணவர்கள் “கலைமாமணி” என்ற பட்டயத்தை உரித்தாக்கியுள்ளார்கள்.


படத்தில் மிருதங்கக் கற்கையை நிறைவு செய்த ஆசிரியர் ருக்‌ஷனின் மாணவர்கள் “கலைமாமணி” விருதப் பட்டயத்தை பெற்ற மகிழ்வில்.


ருக்சனைப் பற்றி ஏற்கனவே பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேன். ருக்‌ஷன் ஶ்ரீரங்கநாதனும் சுவிற்சர்லாந்தின் இரண்டாந்தலைமுறைக் கலைஞன். இங்கே கற்று நாடளாவியரீதியில் பல மாணவர்களை உருவாக்கி இன்று அவர்களையும் ஆசிரியர் தரத்துக்கு உயர்த்தி நிற்கும் ஒரு திறன் மிகு ஆசிரியர்.

 

ஜரோப்பாவில் அனைத்துலக தமிழ்க்கலை  நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவில் மிருதங்கத்தில் முதன் முதலாக பட்டயச் சான்றிதழ் பெறும் பெண்ணாக செல்வி ஹர்ஷா பாலகுமரன் விளங்குகின்றார்.


பட்டயம் பெற்ற அனைத்து கலைஞர்களைக்களும் அன்பு நிறைந்த வாழ்த்துகள்.


இணுவையூர் மயூரன்

15.09.2025

September 11, 2025

“காலம் எவ்வளவு மாறுதலானது”



18 ஆண்டுகளுக்கு முன் நான் பணிபுரிந்த ஒரு நிறுவனத்தில் எனக்கு பொறுப்பாக இருந்தவர் கிழக்கு ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர். மிகவும் கடுமையானவள். சூழலுக்கேற்ப சரி வர நிர்வகிக்கத் தெரியாதவள். சூழலுக்கேற்ப நிர்வகிக்கத் தெரியாததால் வேலை அதிகமாகும் நேரங்களில் அதனைச் சமாளித்து வேலையாட்களைக்கொண்டு வேலை வாங்கத் தெரியாமல் சத்தமிட்டு வேலையாட்களை மனச் சோர்வடைய வைத்துவிடுவாள். அவளைப் பொறுத்தவரை வேலையாட்கள் என்றால் ஒரு வகை அடிமைகள். 

அனேகமாக அவளது நடவடிக்கை குறித்து அவளோடு அதிகம் சண்டையிடும் நபராக நான் மட்டுமே இருந்தேன். ஒரு முறை இனிமேல் உன்னோடு வேலை செய்ய முடியாது என்று சொல்லி உடனடியாகவே பணிவிடுப்பு கடிதத்தை எழுதி கையெழுத்து வைத்து கொடுத்துவிட்டேன். அதே நிறுவனத்தின் வேறு கிளையொன்றுக்கு விண்ணப்பித்து வேலைக்கு செல்ல முயன்றபோதுதான் எனது கிளையின் நிர்வாகப் பொறுப்பாளருக்கு நான் வேலையை விட்டுச் சென்றது தெரிய வந்தது. அவர் தொடர்பு கொண்டு நீ ஏன் வேலையை விட்டுப் போனாய் திரும்பவும் வா என்று அழைத்து என்னை அதே வேலைக்கு சேர்த்துக் கொண்டார். சில மாதங்களில் நிதிக் கையாடல், வேலைக்கு வராமலே வந்ததாக பதிவு செய்தமை போன்ற அவள் மீதான குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவள் உடனடியாகவே வெளியேற்றப்பட்டாள். நான் அதற்கு பிறகு சுமார் ஐந்து ஆண்டுகள் அங்கு வேலை செய்து வேறு வேலை அமைய வெளியேறிக்கொண்டேன். 

இந்த வாரம் நான் தற்போது வேலை செய்யுமிடத்தில் சில திடீர் மாற்றங்களால் அதிகூடிய வேலை. அதனால் வெளியே இருந்து தற்காலிகப் பணியாளர்களை வழங்கும் நிறுவனம் ஒன்றினூடாக சில பணியாளர்கள் இன்று வேலைக்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கான இன்றைய வேலைகள் அடங்கிய கோப்பினை வழங்கி விளக்கமளிக்கச் சென்றிருந்தேன். புதிதாய் வந்தவர்களில் ஒருத்தி அவள். 

விளக்கமளித்து வேலையை ஒப்படைத்துவிட்டு புறப்படும்போது வந்து கையைப் பற்றிச் சொன்னாள் “ காலம் எவ்வளவு மாறுதலானது “ என்று. சிரித்து விட்டு வந்தேன். கிடைத்த சிறு ஓய்வில் அந்தச் சம்பவத்தை எழுதிக்கொண்டு பேஸ்புக்கில் நுழைந்தால் “இலங்கையின் முன்னாள் குடியரசுத்தலைவர்” தனது அரச இல்லத்தில் இருந்து வெளியேறிக்கொண்டிருக்கும் செய்திகள் படங்களோடு உண்மைதான் “காலம் எவ்வளவு மாறுதலானது”

September 7, 2025

பெண் தெய்வங்கள், அடக்குமுறை, மற்றும் நினைவின் அரசியல்


தமிழகக் கிராமங்களில் நிலைத்திருக்கும் பெண் தெய்வங்களின் வரலாற்று வேர்கள் பெரும்பாலும் அநீதியுடன் தொடங்குகின்றன. அதிகாரவர்க்கத்தினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்கள், மறைக்கப்பட்ட உடல்களாக பூமிக்குள் புதைக்கப்பட்டாலும், அவர்களின் நினைவு அடக்கப்படவில்லை. அந்த வன்முறையின் குரல், காலப்போக்கில் கிராம மக்களின் காவல் தெய்வங்களாக மாறியது.

இந்தக் கதைகளின் மையத்தில் இரண்டு பெரிய அடுக்குகள் இருக்கின்றன:

அநீதி அனுபவித்த பெண், மரணத்திலும் நீதியை துரத்திக் கொண்டே இருக்கிறாள்.

அந்த அநீதியை நினைவில் வைத்துக்கொள்ளும் சமூக மனசாட்சி, அவளை தெய்வமாக உயர்த்துகிறது.

இவ்வாறு பெண் தெய்வங்கள் மக்கள் நம்பிக்கையின் மையத்தில் நிற்பதோடு, மறைக்கப்பட்ட வரலாற்றின் அரசியல் குரலாகவும் செயற்படுகின்றன.

இதே அடுக்கில் எங்களுடைய காலத்திலும், ஈழத்தில் செம்மணியில் நடந்த கிருசாந்தியின் கொடூரமான இனப்படுகொலை இடம்பெறுகிறது. அவளது புதைக்கப்பட்ட உடல், இன்று ஒரு இனப்படுகொலையின் முதல் சாட்சியாக உலகம் முழுவதும் பேசப்படுகிறது. 

கிருசாந்தியின் மரணம் தனிப்பட்ட வலியாக இல்லாமல், ஆயிரக்கணக்கான மறைக்கப்பட்ட உயிர்களின் நீதிக் கதவைக் குத்தும் சின்னமாக மாறியுள்ளது.

பெண் தெய்வங்களின் கதைகளிலிருந்து கிருசாந்தியின் நினைவு வரை,  இவை அனைத்தும் ஒரு தொடர்ச்சியைச் சொல்கின்றன.

அநீதி மறைக்கப்படாது, மரணம் கூட உண்மையை அழிக்காது. நினைவு தெய்வமாகி, நீதிக்கான போராட்டமாக உயிர்வாழும்.

#இணுவையூர்_மயூரன்

07.09.2025


படங்கள்: பிரபாகரன் டிலக்சன்

August 26, 2025

பாரதியின் கண்ணம்மா


எண்ணங்களில் ஓர் நிழல்,

நெஞ்சின் மறைமுக மலர்,

பல நாள் தேடிய கனவு,

இன்று கண்முன் நின்றது…


அவள் வருவாள் என நினைக்காத வேளை,

அலைபோல் வந்து நின்றாள் புன்னகையோடு,

நான் சொல்ல நினைத்த வார்த்தைகள்,

எல்லாம் காற்றில் கரைந்துபோனது…


பேசும் அவள் குரலில்,

புது உலகம் விரிந்தது,

மறைத்த காதல் நெஞ்சில்,

ஒளி கண்டது, உயிர்க் கீதம் மலர்ந்தது…


இச்சிறு தருணம் போதும்,

ஒரு ஆயுளுக்கு நினைவாக,

அவள் அருகில் வந்த அந்த நிமிடம்,

என் வாழ்வின் இனிய சங்கீதமாக…


#ஈழத்துப்பித்தன்

25.082025

July 7, 2025

திருச்செந்தூர்

இன்று திருச்செந்தூர் முருகனுக்கு குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா.

திருச்செந்தூர் முருகன் தமிழ் நாட்டு எல்லைக்குள் இருந்தாலும். ஈழத்தமிழருடன்தான் நெருக்கம் அதிகமானவர். 

ஈழத்தில்தான் செந்தூரன், திருச்செந்தூர்நாதன், செந்தூர் என்ற பெயர்களை அதிகம் காணமுடியும். 

சிறுவயதில் இருந்து கடலோரம் குடிகொண்ட திருச்செந்தூர் மீது ஏதோ இனம் புரியாத ஈர்ப்பு. முதலாவது இந்தியப் பயணத்தின்போது திருச்செந்தூர் பயணம் திட்டமிட்டும் செல்ல முடியவில்லை. இரண்டாவது தடவை குடும்பமாகச் சென்று ஆறுபடை வீடுகளின் தரிசனத்துக்கு திட்டமிட்டிருந்தேன். அந்தப் பயணத்தில் ஆறு படைவீடுகளின் தரிசனமும் சாத்தியமானது. எட்டு ஆண்டுகளுக்கு முன் அதுவும் இதே வாரத்தில்.

ஒரு மாலை வேளை திருச் செந்தூர் கோவிலைச் சென்றடைகின்றோம். சுற்றி வந்து கோவிலுக்குள் உள் நுழைய வழி தெரியாது நிற்கின்றோம். மஞ்சள் வேட்டி, இடுப்பில் பச்சை சால்வை கழுத்தில் ஒற்றை உருத்திராட்ச கயிறு பூநூல் அணிந்த ஒருவர் தன் பெயர் மயூரன் என்று சொல்லி அறிமுகமாகின்றார். ஆச்சரியமாக இருந்தது. தமிழ்நாட்டில் மயூரன் என்ற பெயர் இருப்பதில்லை.

அவராகவே வந்து் கோவிலின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிக்காட்டினார். கிடைத்தற்கரிய பஞ்சலிங்க தரிசனம் உட்பட, செந்தில் ஆண்டவரை அருகில் அழைத்துச் சென்று தரிசிக்கவைத்ததோடு, செந்தில் ஆண்டவருக்கு சந்தனக்காப்புச் செய்யப்பட்ட சந்தனத்தையும் கை நிறைய அள்ளித்தந்து வழியனுப்பி வைத்தார். இவ்வளவு தூரம் எங்களோடு தன்பொழுதைச் செலவு செய்தவருக்கு சிறுதொகைப் பணத்தை கொடுக்க கரங்களை நீட்ட உண்டியலைக்காட்டி அங்கே போட்டுச் செல்லுமாறு கூறிச் சென்றுவிட்டார். எனக்கென்னவோ அந்த திருச்செந்தூரானே நேரில் வந்து வரவேற்று தன் கோவிலைச் சுற்றிக் காட்டி அனுப்பிய உணர்வு. 

அதே போல் கடந்த ஆண்டும் இதே மாதம் திருச்செந்தூர் செல்லும் வரம் கிட்டியது. மாலையிலே சென்று கடலில் நீராடி இரவு அங்கேயே தங்கி அதிகாலைத் தரிசனம் செய்து வரும் வாய்புக்கிடைத்தது.

அதிகாலை 6:00 மணித் தரிசனத்துக்காக காலை 4:30 மணியளவில்  சென்றுவிட்டோம். சிறப்புத்தரிசன வழியைத் தெரிவு செய்யாமல் சாதாரண வழியை தெரிவு செய்திருந்தோம். கருவறையை நாம் எட்டும்போது திரைச் சீலை மூடப்பட்டு வழிபாட்டு நேரம் முடிவடைகின்றது. காத்திருக்கும் அனைவரையும் அங்கிருக்கும் காவலாளிகள் விரட்டுகின்றார்கள். என் முன் காத்திருந்த எல்லோரும் சென்றுவிட்டார்கள். இவ்வளவு தூரம் இருந்து வந்த என்னை உன்னை பார்க்கவிடாது தடுக்கிறாயே முருகா என நினைத்துக்கொண்டு, நான் தரிசனம் செய்யாமல் செல்ல மாட்டேன் என்றேன். எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் காவலாளிகள் நிற்க அனுமதி தந்தார்கள்.

சிறுது நேரத்தில் மீண்டும் திரை விலகி தீபாராதனையுடன் முன் நின்று முருகனை தரிசிக்கும் வரம் கிடைத்தது. சாதாரணமாக கடந்திருக்க வேண்டிய எனக்கு தீபாராதடையுடன் காட்சி தர முருகன் நினைத்தானோ என எண்ணிக்கொண்டு வெளியே வர காலை உணவுக்கான அன்னதானத்துக்கு வருமாறு ஒருவர் அழைக்கின்றார். அமைதியாக அமர்ந்து அந்த காலைப்பொழுதில் வழங்கப்பட்ட தமிழ்நாட்டுப் பொங்கலையும் சாம்பாரையும் சுவைத்தபொழுது “என் வீட்டுக்கு வந்த உனக்கு விருந்தளித்து அனுப்புகிறேன்” என்று முருகன் சொன்னது போன்ற உணர்வு மனம் முழுதும் நிறைந்தது. 

#இணுவையூர்_மயூரன் 

#திருச்செந்தூர் #தமிழ்நாடு #india #viralchallenge


July 2, 2025

செம்மணியில் கண்மணிகள்

 “என்ரை ஐயோ”

என்று கத்திக் குழறவேண்டும் 

என்ற மன நிலை

என் இதயத்தின் தொலைவான மூலைவெளிகளில்

ஒரு கனமான மழையைப் போல் கொட்டிக்கொள்கிறது.


செய்ய ஒன்றுமில்லாத

கையறு நிலையிலிருப்பதற்கான உணர்வு,

தீண்ட முடியாத வெப்பமாக

வெதும்பி எழுகிறது 

வெறுமையான ஒரு மூச்சாகவே.


இயலாமையின் கடைசி எல்லையில்,

ஒரு விழிவிட்டு வரும் கண்ணீர் கூட

வழி தெரியாமல் தேங்கி

இதயத்தின் ஓரத்தில் தங்கிக்கொள்கிறது.


பிஞ்சு குழந்தைகள்,

பிணந்தின்னிகளின் வாய்களில் சிக்கி,

சிதறி சிதைந்தனர் –

மீதமிருப்பது

சில எலும்புகள் மட்டுமே – சாட்சிகளாக.


அந்த இறுதி நொடியிலே –

அவர்கள் சிந்தையில் என்ன இருந்திருக்கக்கூடும்?


ஒரு சிறுமி,

அம்மாவின் குரலைத் தேடி,

தன்னை அடித்தவனின் காலையே

ஆதரவெனப் பற்றியிருப்பாளா?


இன்னொரு சிறுவன்,

நிலவைக் கண்டபோது,

“என் வீடு எங்கே?” என

மனதுள் கேட்டுக்கொண்டிருப்பானா?


அல்லது 

அவனே அறியாமல்,

ஒரே ஒரு கணத்தில் உணர்ந்திருப்பானா

இது தான்

தன் வாழ்வின் கடைசி வலி என்று?


#ஈழத்துப்பித்தன்

02.07.2025

July 1, 2025

கீச் கீச் சத்தம்


 

இன்பம் தந்து மகிழ்வித்து 

மனம் நிறைத்த கீச் கீச் சத்தம்

இன்றோ

இதயத்தின் ஓரம் 

ஈனஸ்வரமாய் ஒலிக்கின்றது.


Freude schenkte es, liess uns lachen,

ein fröhliches Quietschen erfüllte das Herz.

Doch heute

erklingt es am Rand des Herzens

wie ein schwacher, klagender Ton.


#ஈழத்துப்பித்தன் 

01.07.2025

June 29, 2025

செம்மணி

 


முப்பது ஆண்டுகள் கழித்து முளைக்கின்றது

எம்மை அழித்து புதைத்த எச்சங்கள் 

நீரின்றி நசுங்கிய நிலத்திலே

நினைவுகள் எலும்பாக முளைக்கின்றன.


ஒரு காலத்தில் கதறல்கள் கட்டுப்பட்ட இடம்

இப்போது மௌனமாகப் பேசுகிறது 

அந்த மண் உரைத்த கதைகள்

முகங்களற்ற எலும்புகளாக நின்று போதிக்கின்றன.


பதுக்கி ஒழிக்கப்பட்ட பிஞ்சுப் பாதங்கள்

பளிச்சென்ற ஒளியாக மிதந்து வருகிறது,

நம் குரல்களின் மௌன வடிவம்

இனி உலகின் சிந்தையை கலைக்கட்டும்


#ஈழத்துப்பித்தன்

29.06.2025


#செம்மணி

March 21, 2025

மனம் வணங்கும் மலர்களின் மெல்லிசை

மௌனத்தின் ஓசையில் பிறக்கும் வசந்தம்,

பனி துளிகள் உருகி நதி தேடும் பாங்கு.

உயிரின் நட்சத்திரங்கள் கண்களில் மலர,

அலைந்து திரியும் காற்றின் நாவில் இசை கனியும்.


மனம் வணங்கும் மலர்களின் மெல்லிசை,

காணாமல் கேட்டுப் போகும் கவிதை.

பழுப்பு வேர்களிலிருந்து பசுமை விரிந்து,

புதுப் பசுமை நினைவுகள் போல விரிகிறது.


ஒரு துளிக்காற்றில் ஒரு கிளையின் ஆடல்,

ஒரு வண்ணப் பூச்சியின் கரம்பற்றி ஓடல்.

வண்ணங்களின் மௌனச் சொற்பொழிவு,

உள்ளம் மட்டும் கேட்கும் வசந்தத்தின் இசை.


#ஈழத்துப்பித்தன்

21.03.2025


March 4, 2025

வீனஸ்து மிலோ (Venus de Milo)



லூவர் அருங்காட்சியகத்தில் மொனாலிசா ஓவியத்துக்கு நிகராக போற்றிப் பாதுகாக்கப்படும் ஒரு சிற்பம் வீனஸ்து மிலோ சிற்பமாகும்.

வீனஸ்து மிலோ (Venus de Milo) என்பது பண்டைய கிரேக்க சிற்பக்கலையின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது அழகின் தேவதை அஃப்ரோடைட் (ரோமன் மரபில் “வீனஸ்”) உருவமாகச் சிற்பிக்கப்பட்டது.

கிரேக்கத்தின் மிலோஸ் (Melos) தீவில் 1820 களில் இச் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

கி.மு. 130–100 (ஹெல்லெனிஸ்டிக் காலம்) காலப்பகுதியில் இச் சிலை உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.

இச் சிலையினை உருவாக்கிய சிற்பியின் பெயர் உறுதி செய்யப்படவில்லை, ஆனால் அலக்சாண்டர் ஆஃப் அந்தியோச் என்பவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வெள்ளை மார்பிள் கல்லிலே செதுக்கப்பட்ட இச் சிற்பம் சுமார் 204 செ.மீ்்உயரமானது. 

இதில் காணப்படும் அழகு மற்றும் பாங்கான உடல் அமைப்பு கிரேக்க சிற்பக்கலையின் மிகுந்த நேர்த்தியை வெளிப்படுத்துகிறது.

சிலையின் இரு கரங்களும் இன்று இல்லை. கரங்கள் எவ்வாறு இருந்திருக்கலாம் என்பதில் பல கருதுகோள்கள் உள்ளன.

சிலை சற்றே சாய்வாக நிற்கும் நிலையில் உள்ளது, இது கிரேக்கக் கலையின் தனித்துவமான அம்சமாகும்.

உடை ஓரமாக பெயர்ந்திருப்பது, அதன் இயற்கை அழகை மேலும் அதிகப்படுத்துகிறது.

இது லுவர் அருங்காட்சியகத்தில் மிக முக்கியமான கண்காட்சிப் பொருளாகவும், உலகளவில் அழகின் தனிப்பட்ட அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.


March 1, 2025

இருபதாம் ஆண்டில்


 சுவிற்சர்லாந்தைப் பற்றி நான் சொன்னால் வேறு நாட்டில் வாழ்பவர்கள் இவர் சுவிசில் இருப்பதால் சுவிசைப் பற்றி புளுகிறார் என்று சொல்வார்கள்.

சுவிற்சர்லாந்தில் புளுகாமல் புழுகமாய் சொல்ல பல விடயங்கள் உண்டு.


அப்படி புளுகமாய்ச் சொல்லக் கூடிய ஒரு விடயம்தான் இதுவும்.


சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்து தமிழுடன் கலைகளையும் கற்று சிறுவயதிலேயே திரிபுறக்கற்று சுவிற்சர்லாந்தின் இளையோர் இசைக்குழு என பெயர்பெற்று விளங்கிய “அங்கையற்கண்ணி” இசைக்குழுவுடன் தன் பயணத்தைத் தொடர்ந்து. 2005 களில் தான் கற்ற மிருதங்க கலை தனக்கு அடுத்த தலைமுறைக்கும் கற்பிக்க ஆரம்பித்தவர் “கலை வித்தகர்” ருக்க்ஷன் ஸ்ரீரங்கராஜா அவர்கள்.


அவரது அந்த முயற்சியூடாக அவரிடம் மிருதங்கம் கற்று ஆசிரிய தரத்தை நிறைவு செய்த பத்து ஆசிரியர்களூடாக துர்க்கா தாள லயாலயம் சுவிஸ் முழுவதும் ஆரோவ் (Aarau), பாசல் (Basel), பேர்ண்(Bern), புர்க்டோர்வ் (Burgdorf), லங்கன்தாள் (Langenthal), லுசேர்ன் (Luzern), மார்த்தினி (Martigny), வில் (Wil), இவர்தோன் (Yverdon), சொஃபிங்கன் (Zofingen) மற்றும் சூரிச் (Zürich) ஆகிய இடங்களில் பரந்து விரிந்து பலநூறு மாணவர்களுக்கு மிருதங்க பயிற்சியினை வழங்குகின்றனர். 


கடந்த 2005 ஆம் ஆண்டு தண்ணுமை (மிருதங்க)கலையை பயிற்றுவிக்கும் நோக்கில் தொடக்கப்பட்ட துர்க்கா தாள லயாலயம்

நாளை 02.03.2025 அன்று இவ் விழா பெரும் முன்னெடுப்புடன் கொண்டாடப்படுகின்றது.


இப்பெரும் இசைவிழாவில் அனைவரையும் அன்போடு வரவேற்று நிற்கிறார்கள்🙏🙏🙏


இவ்விழா 2 மார்ச் 2025 அன்று Trimbach நகரில் நடைபெறவுள்ளது. நிகழ்வு நடைபெறும் இடம்: Schulhausstrasse 9, 4632 Trimbach. பிற்பகல் 14 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.


இவர்களை நாமும் புளுகமாக வாழ்த்தி வரவேற்கின்றோம்.



February 11, 2025

மழையின் மௌனம்

 

சாளரங்களை திறந்து பார்க்கிறேன் மழை

சதிராடிக்கொண்டிருக்கிறது

துளிகளாய் விழுந்து கண்ணில் நனைக்க

தூய நினைவுகள் ஒவ்வொன்றாய் மலர்கின்றன

வெற்றிட மனதின் ஓரம் தொட்டு

வெண்முகில் கண்ணீராய் வழிகின்றது

காற்றின் ஸ்வரத்தில் சொல்லாத கவிதைகள்

கரையாத உணர்வாய் நெஞ்சில் பெருகின்றது

மழை துளிகள் மண் மீது மட்டும் அல்ல - என்

மனதின் மீதும் பொழிகின்றது.


#ஈழத்துப்பித்தன்

10.02.2025

February 9, 2025

எங்களின் சமையல் கலை நிபுணர் – அப்பம்மா


எங்கள் அப்பம்மா சிறந்த சமையல்காரி. எங்கள் சொந்தங்கள், பந்தங்கள், அயலட்டையில் எவருக்கேனும் கொண்டாட்டம் என்றால், இடுப்பில் சீலையைத் தூக்கிச் சொருகிக்கொண்டு சமையல் பகுதியில் முதல் ஆளாக நின்றிருப்பா. அவரது வீடு ஒரு அமுதசுரபி போன்றது; எந்த நேரத்தில் யார் வந்தாலும், அவர்களுக்கு சாப்பாடு அளிக்காமல் அனுப்புவதில்லை.

அப்பம்மா சமைக்கும் உணவின் சுவை, அனைவரையும் கவரும். அவர் சமையல் எப்போதும் வீட்டு உறுப்பினர்களின் தேவையைத் தாண்டியே இருக்கும். எதிர்பாராத நேரத்தில் வந்தவர்களுக்காகவும் கூடுதல் உணவு இருக்கும். விருந்தினர் என்ற அடிப்படையில், அனைவரையும் அன்புடன் ஏற்றுக்கொண்டு, உணவின் மூலம் மகிழ்ச்சியை பரப்புவதே அவருடைய இயல்பு.

அப்பம்மாவின் சமையலறை ஒரு கொண்டாட்டத்திற்குரிய புனித இடம் போல இருக்கும். அவரது கையால் தயாரான உணவு, அப்படியொரு சுவையாய் இருக்கும். அப்பம்மாவின் அந்தக் கைப்பக்குவம் திருமணமாகி வந்த பின் அப்பம்மாவிடம் சமையல் பழகிய என் அம்மாவிடமும் உண்டு. அதே பக்குவம் என்னிடமும் என்னிடம் சமையல் பழகிய என் மனைவியிடமும் என் தங்கையிடமும் உண்டு.

அப்பம்மா வித்தியாசமான மாலைச் சிற்றுண்டிகள் செய்வா. மரவள்ளிக் கிழங்குக்கு எங்கள் ஊர் பெயர் போனது என்பதால் மரவள்ளிக் கிழங்கில் செய்யப்படும் சிற்றுண்டிகள் அதிகமாய் இருக்கும்.

மரவள்ளிக் கிழங்கை நீள நீளமாக வெட்டி, கோதுமை மாவில் உப்பு, மஞ்சள், அரைத்த செத்தல் சேர்த்து செய்த கலவையில் பொரித்தெடுப்பா. அப்பிடி ஒரு சுவையாய் இருக்கும். 

எனக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டிகளில் இதுவும் ஒன்று. நல்ல மாப்பிடிப்பான மரவள்ளி கிழங்கை கண்டால் அப்பம்மாவின் நினைவு வந்துவிடும்.  வேண்டி வந்து அதே போல் பொரித்துவிடுவேன்.

இன்றும் அதே போல்…

இதன் செய்முறை


https://youtu.be/qtK7PD-BFH4


#இணுவையூர்_மயூரன்

09.02.2025

நிலைக்கதவடி ஞாபகங்கள்




வெள்ளெண கோழி கூவ முன்னமே எழும்பி

எண்ணிலா வேலைகள் செய்யிறா அம்மா

திண்ணையில் கிடந்து திமிர் முறிக்காமல்

தண்ணி வார்க்கப் போகும் அப்பா 


கிட்டி விளையாட கூடிய பெடியள்,

மண்பானையை நொருக்கி சத்தம் கேக்க

நடுவீட்டில் தண்ணி ஒழுகிக் கிடந்தது,

“எவனடா உடைச்சது!” என்று கத்தும் அக்கா.


வீட்டுக் கூரையில் தூக்கணாங் குருவிகள்,

வெள்ளிக்கிழமை பிள்ளையாரின் மணி ஒலி

எட்டிப் பாத்தா புக்கை பொங்கிப் படையல்,

பெரியம்மா பூவரசம் இலையோட போறா.


பக்கத்து வீட்டுப் பெட்டை படலை திறந்து,

“பா பா இஞ்ச!” எண்டு கோழியை கூப்பிடும்,

“அப்பாடி” எண்டு விட்டு வெக்கமாய் சிரிச்சபடி,

அங்கையும் இஞ்சையும் சுத்திப் பாக்கும் குமார்.


மழைக்காலம் வந்தால் மண் வாசம் வீசும்,

தகரப் பேணியில் தட்டி விளையாடும், 

குஞ்சக்காவின் சின்னப் பெடி,  அந்த வாசல் நிலையிலை சாஞ்சபடி ரசிச்சதை மறக்கேலாது


எவ்வளவோ தூரம் போனாலும் மறக்கேலாது,

அந்தச் சத்தங்களும் தலைவாசலும் வாசங்களும்,

யாழ்ப்பாணத்து வீட்டு வாசலின் ஞாபகங்கள்

நெஞ்சோட நிண்டு பூவாய் பூக்குது இண்டைக்கும்


#ஈழத்துப்பித்தன்

04.02.2025 


February 2, 2025

பெருந்தலைவர் மாவைக்கு அஞ்சலி

 

பாதை நீண்டது, பயணம் முடிந்தது,

பாராட்டுக்களும், பிழைகளும் பின்னின்றது.

மண்ணில் விழுந்த சுவடுகள் போல,

மறவாதே என் தேசத்தின் ஓரங்கள் சொல்லும் உன் கதைகள்.


தீவிரத்தின் தீயில் தீண்டிய காலம்,

சிறை சுவரின் நிழலில் சிதைந்த கனவுகள்.

ஆரம்பத்தின் ஆர்வமான ஓர் போராட்டத் தீ,

ஆனால் காலங்கள் காயத்தை விட்டுச் சென்றது.


மக்களின் கண்ணீரும் நம்பிக்கையும்

மாறியதோ? மறைந்ததோ?

வாழ்க்கை என்ற சதுக்கத்தில்

வெற்றியும் தோல்வியும் கலந்து வந்ததோ?


அரசியல் ஓர் அரங்கம்; அதில் உன் பாதம்

வலியும் வலிமையும் தந்த பல அனுபவங்கள்.

கைகொடுத்தவனாய், சில சமயம் கை விட்டவனாய்,

நினைவுகளில் நீ கலந்து போவாய்.


பிழைகள் இருந்தாலும், பகை இருந்தாலும்,

போராட்ட பாதையின் ஓர் பக்கமாய் நீ இருந்தாய்.

அஞ்சல் இல்லாமல், அசைந்தாலும் வீழாத பயணம்,

அதற்கே என் கவிதையின் நிழல் அஞ்சலியாய்.


மண்ணுக்கும் மண்ணில் உனக்கே ஒரு நினைவாக,

மக்களின் மறதி கூட ஓர் புகழாக.

சங்கதி சாற்றும் வரலாறு உன் பெயரால் ஒலிக்க,

சாதனைக்கும் சாயலுக்கும் என் கவிதை ஓர் அஞ்சலி.


உண்மைகள் கடுமையாயிருந்தாலும்,

உணர்வுகள் மழை போல விழுந்தாலும்,

உன் பயணம் ஓர் வரலாறு.

பொதுவுடைமையாக, பொலிவோடு, பிழையோடு

உன் பெயர் எங்கோ பதிந்து போகும்.


பிழைகள் மறவாத உண்மைகள்,

போராட்டம் மறையாத ஓசை.

அவ்விதமே உனது வாழ்வும்,

இருப்பதால் - ஒருசிலருக்குப் பாராட்டாக,

மற்றவர்களுக்கு பாடமாக.


#ஈழத்துப்பித்தன்